அட்டகத்தி ரஞ்சித்தின் இயக்கத்தில் அமேசான் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில், திராவிட வீரன் என்ற பட்டம் பெற்ற இராயபுரம் மீனவ குத்துச்சண்டை வீரர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இயக்குனர் பா.ரஞ்சித்தின் படங்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் குறித்த கருத்துக்களையும் அடையாளங்களையும் தாங்கி திரையை தொட்டு சர்ச்சையில் சிக்கி விமர்சனத்துக்குள்ளாவது வாடிக்கையாகி வருகின்றது.
அந்தவகையில் ரஞ்சித் இயக்கத்தில் நேரடியாக அமேசான் ஓடிடியில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகி உள்ளது. 1970ஆம் ஆண்டு தொடங்கி 1980ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை, கலை இயக்குனரின் பங்களிப்பால் படமாக்கிய விதம், குத்துச்சண்டை காட்சி அமைப்புகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரத்தில் சார்பட்டா பரம்பரையை பற்றி நன்கு அறிந்த வட சென்னை மீனவர்கள் சிலர், இந்த படம் குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆங்கிலேயரால் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட குத்துச்சண்டையில் அப்போது முடிசூடா மன்னனாக விளங்கிய ஆங்கிலோ இந்தியரான டெர்ரி என்பவர் சார்பட்டா பரம்பரையை சேர்ந்த அருணாச்சலம் என்ற வீரரை களத்தில் வைத்தே உயிரிழக்க செய்துள்ளார்.
அன்றில் இருந்து இரண்டே மாதங்களில் அதே மைதானத்தில் குத்து சண்டை சாம்பியன் டெர்ரியை தோற்கடித்து சார்பட்டா பரம்பரையை பிரசித்தி பெற செய்தவர் இராயபுரம் காசிமேடு பனைமரத்தொட்டி பகுதியை சேர்ந்த மீனவரான கித்தேரிமுத்து..!
இவரது வீரத்தை மெச்சும் விதமாக கித்தேரி முத்துவுக்கு திராவிட வீரன் என்ற பட்டத்தை பெரியார் சூட்டியுள்ளார்... அண்ணா மற்றும் கலைஞரின் பாரட்டுக்களையும் பெற்றவர் கித்தேரி முத்து... ஆனால் படத்தில் பசுபதி நடித்துள்ள ரெங்கன் என்ற கதாபாத்திரத்திற்கு திராவிட வீரன் என்ற பட்டம் சூட்டப்பட்டு வியாசர்பாடியில் வசிப்பதாக காட்டி இருப்பதும் வரலாற்று திரிப்பு என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
படத்தில் நாயகன் ஆர்யாவின் கதாபாத்திரமான கபிலனை, சார்ப்பட்டா பரம்பரையில் குறிப்பிட்ட சமுதாய பிரிவை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்துவதற்கு காட்சிகளால் சிரமபட்டிருக்கும் இயக்குனர் ரஞ்சித், அரசியல் அதிகாரத்தில் பின் தங்கி இருக்கும் மீனவர்கள் தான் உண்மையில் சார்பட்டா பரம்பரையில் ஆதிக்கம் செலுத்திய சாதனையாளர்கள் என்பதை ஒரு இடத்தில் கூட பதிவு செய்ய மறந்தது ஏன் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
கித்தேரி முத்து, டெர்ரியை 2ஆவது முறையாக வீழ்த்திய டாமிகன் சுந்தர்ராஜன், பங்கேற்ற 120 போட்டிகளில், 100 போட்டிகளில் எதிராளியை நாக் அவுட் செய்து வெற்றிகண்ட ஆறுமுகம், முகமது அலியுடன் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மோதிய பாக்ஸர் பாபு வரை அனைவரும் சார்பட்டா பரம்பரையின் மீனவர்களே என்றும், ரஞ்சித் கூற்றுப்படி அவர் குறிப்பிடும் பிரிவை சேர்ந்த இரு வீரர்கள் சார்பட்டா பரம்பரையில் இருந்தனர் என்றும் ஒருவர் பாக்சிங் சாம்பியன் டெர்ரியின் தாக்குதலால் மேடையிலேயே மரணித்த அருணாச்சலம் மற்றொருவர் அந்தோணி ஜோசப் என்கின்றனர்.
இது கற்பனை கதை என்றால் அந்த காலகட்ட அரசியல் தொடர்பான நிகழ்வுகளில் எல்லாம் அசல் பெயர்களை பயன்படுத்தி இருக்கும் ரஞ்சித், குத்துச்சண்டையில் புகழ் பெற்ற மீனவ வீரர்களில் ஒருவரை கூட அடையாளப்படுத்தாது எந்த விதத்தில் நியாயம்? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேநேரத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இயக்குனர் ரஞ்சித்துக்கு கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சர்ச்சைகள் தான் தனது படத்தின் வசூலுக்கான விளம்பர யுக்தி என்பதை அறியாதவரா? இயக்குனர் ரஞ்சித் என்கின்றனர் திரை உலகினர்..!