தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பெப்ஸியில் இடம்பெற்றுள்ள லைட் மேன் சங்கம் , ஊரடங்கை மீறி நடத்தப்படும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு செல்ல சம்பந்தப்பட்ட சீரியல் தயாரிப்பாளரின் பொறுப்பேற்பு கடிதம் இருந்தால் படப்பிடிப்புக்கு செல்லலாம் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
பெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி இரு வாரங்களுக்கு முன்பு கொரொனா பெருந்தொற்றால் தங்களது சங்க உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட உயிரிழப்பு பாதிப்பு குறித்து வேதனையோடு தெரிவித்திருந்தார் மேலும் அண்மையில் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கிற்க்கும் ஆதரவு தெரிவித்தார்
இந்த நிலையில் அரசு இன்னும் அனுமதிக்காத நிலையில் சீரியல்கள் படப்பிடிப்புகளுக்கு செல்ல சில சேனல்கள் அதன் தயாரிப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியானது. அதனை மெய்பிக்கும் வகையில் சீரியல் படப்பிடிப்பு பணிக்கு செல்ல அனுமதி கேட்டு பெப்ஸியில் அங்கம் வகிக்கும் லைட்மேன் சங்கத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.
அரசு ஊரடங்கு குறித்து கவலை படாத அந்த சங்கமோ, சீரியல் படப்பிடிப்புகளுக்கு செல்லும் உறுப்பினர்கள், தங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு பாதிப்புக்கும் சம்பந்தப்பட்ட சீரியல் தயாரிப்பாளர் தான் பொறுப்பு என்று ஒப்புதல் கடிதத்தை தயாரிப்பாளரின் கையெழுத்துடன் பெற்று வர அறிவுறுத்தியுள்ளது.
அரசு அனுமதிக்காத தற்போதைய சூழ்நிலையில் சீரியல் படப்பிடிப்புக்கு செல்வது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா ? என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் சீரியல் படப்பிடிப்பு ஒருவர் அல்லது இருவர் மட்டுமே தனியாக சமூக இடைவெளியுடன் செய்யும் பணியில்லை, 50 க்கும் மேற்பட்டோர் கூட்டு சேர்ந்து செய்யும் வேலை.
தயாரிப்பாளரின் கையொப்பம் உள்ள ஒப்புதல் கடிதம் இருந்தால் அங்கு கொரோனா பரவாதா ? அல்லது தயாரிப்பாளர் பணம் கொடுத்தால் கொரோனாவில் இருந்து தான் காத்துக் கொள்ளமுடியுமா ? கொரோனாவால் ஏற்படும் உயிர்இழப்புகளுக்கு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் கொடுக்கும் பணம் ஈடாகி விடுமா ? என்பதையும் சம்பந்தப்பட்ட சங்கங்கள் உணரவேண்டும்.
அரசின் ஊரடங்கை மதித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் வரை சீரியல் படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது நாம் அனைவரின் கடமை என்பதை சம்பந்தப்பட்ட சங்கங்கள் உணரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு