வட மாநிலங்கள் ஆக்ஸிஜன் தட்டுப்பட்டினால் திணறிக்கொண்டு இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு 10 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கி நெகிழ வைத்துள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
தங்கள் அபிமான நடிகர்கள் படம் வெளியானால் முதல் நாள் முதல் காட்சிக்கு கும்பலாக சென்று ஆடுவதும் , கட் அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்வதும் மட்டுமே ரசிகர்களின் வேலை என்று பொதுவாக விமர்சிக்கப்படும் நிலையில் விஜய் ரசிகர்கள் தனி ரூட்டில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.
வட மாநிலங்கள் பலவற்றில் ஆக்ஸிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தடுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஒரு கொரோனா நோயாளிகள் கூட பலியாகி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ரோட்டரி சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களும் அரசுடன் கைகோர்த்துள்ளன.
அந்தவகையில் கடலூர் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் ஒன்று கூடி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு 5 பெரிய சிலிண்டர்கள் 5 சிறிய சிலிண்டர்கள் என மொத்தம் 10 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியுள்ளனர்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு கையுறைகளையும், முகக்கவசங்களையும் வழங்கி நெகிழ வைத்துள்ளனர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்.
கடலூர் விஜய் மக்கள் இயக்கப் பொறுப்பாளர் சீனு, தலைவர் ராஜசேகர், அப்பாஸ் ஆகியோர் சேர்ந்து இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி கொடுத்ததாக கூறப்படுகின்றது
இதேபோல ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ரசிகர்களும் சமூக சேவை அமைப்புகளும் முன் எச்சரிக்கையுடன் கரம் கோர்த்தால் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வரும் முன் காக்கலாம்..!
இதற்க்கிடையே விருத்தாசலத்தில் மாஸ்க் இல்லமல் சமூக இடைவெளியை மறந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் மாணவர்கள் இல்லாத பள்ளிக்கு சென்று கொரோனாவால் மாண்டு போவதால் அவர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வினோத கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.