சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு மனைவி ஷாலினியுடன் சென்ற அஜீத்தை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியதால் பெண் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறிய அந்த பெண்ணுக்கு உதவ முயன்றதால் அஜீத்திற்கு ஏற்பட்ட தர்மசங்கடம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை வளசரவாக்கம் சௌத்ரி நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான பர்சானா இவர் சினிமா கலை இயக்குனர் ஜலாலுதீனின் மகளாவார்.
தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்த ஃபர்சானா கடந்த மே மாதம் நடிகர் அஜித் குமார் தனது மனைவியுடன் சிகிச்சைக்காக தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு வந்த போது அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தங்கள் மருத்துவமனைக்கு வரும் வி.ஐ.பிகளுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விடும் என்று கருதி பர்சானாவை பணி நீக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தந்தை சினிமா தொழிலாளர் சங்கமான பெப்ஸியில் உறுப்பினராக இருப்பதை சுட்டிக்காட்டி , பர்சானாவுக்கு மீண்டும் அந்த தனியார் மருத்துவமனையில் பணி வழங்க ஏற்பாடு செய்யுமாறு அஜீத்துக்கு வேண்டுகோள் வைத்து கடந்த மாதம் 19 ந்தேதி கடிதம் ஒன்றை பெற்றுக் கொண்டு அஜீத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார் பர்சானா..!
அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, பெப்சியை தொடர்பு கொண்டு, மருத்துவமனையை தொடர்பு கொண்டு பணி வழங்கும்படி அஜீத் பேச வேண்டும் என்று பெப்சி கூறுவது சரியான நடவடிக்கையா ? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதன் தலைவர் அந்த கடிதத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுள்ளார். இருந்தாலும் பெப்ஸியில் இருந்து கடிதம் வந்திருப்பதாலும் அந்த பெண் பலமுறை உதவி கேட்டு வந்ததாலும், என்ன உதவி வேண்டும் என்று கேளுங்கள் என்று அஜீத் கூறியுள்ளார். அதன் படி சுரேஷ் சந்திரா, பர்சானாவை தொடர்பு கொண்டு, என்ன உதவி வேண்டும் என்று கேட்டுள்ளார்.
பர்சானாவோ, தனக்கும் தனது கணவருக்கும் வேலையில்லை, ரொம்ப கஷ்டபடுகிறோம் எல்லா வீட்டு பிள்ளைகளும் ஆன்லைன் கிளாசுக்கு போறாங்க, பள்ளிக்கூட கட்டணம் கூட செலுத்த இயலாததால் என் மகளால் படிக்க கூட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த அஜீத், எக்காரணத்தை கொண்டும் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்க கூடாது என்றும் உடனடியாக அந்த பெண்ணின் மகள் படிக்கும் பள்ளிக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான முழு கல்வி கட்டணத்தையும் பள்ளியில் செலுத்திவிடுமாறும் கூறியுள்ளார். இத்தனைக்கும் அந்த பெண்ணின் மகள் படிப்பது ராமாவரத்தில் ஸ்ரீசைத்தன்யா டெக்னோ ஸ்கூல் என்ற தனியார் பள்ளிக்கூடம் கட்டணமும் மற்ற பள்ளிகளை விட அதிகம் அப்படி இருக்க மனிதநேயத்துடன் உதவி செய்ய அஜீத் கூறியதாக சொல்லப்படுகின்றது.
அந்த பெண்ணிடம், மாணவியின் பெயர் விவரம், பள்ளியின் வங்கிகணக்கு, எவ்வளவு கட்டணம் ? என்பது உள்ளிட்ட விவரங்களை சொன்னால் ஆன் லைனில் செலுத்தி விடுகிறோம் என்று சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணோ பள்ளியில் செலுத்த வேண்டாம் தனது வங்கி கணக்கில் பணத்தை செலுத்துங்கள் என்று கூறி தனது வங்கி கணக்கை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
பள்ளியில் தான் பணத்தை கொடுக்க முடியும் என்று சுரேஷ் சந்திரா சொன்ன நிலையில் அவரிடம் மிகவும் அநாகரீகமான முறையில் பேசியதாக கூறப்படுகின்றது. அதனை மறைத்து, அஜீத்தின் பெயரை கெடுக்கும் நோக்கோடு, அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா, உதவுவதாக நம்பிக்கை மோசடி செய்து விட்டார் என்று வளசரவாக்கம் போலீசில் கடந்த 1 ந்தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார் பர்சானா.
இரு வாரங்களுக்கு முன்பு சுரேஷ் சந்திராவை அழைத்து போலீசார் விசாரித்த போது அந்தப்பெண் தெரிவித்தது பொய்யான புகார் என்பதை அறிந்து பர்சானாவை எச்சரித்து அனுப்பியதோடு இந்த வழக்கையும் முடித்து வைத்துள்ளனர். ஆனால் இதனை மறைத்து சினிமா பி.ஆர்.ஓ ஒருவர் மூலம் அஜித்துக்கு அவப்பெயர் உண்டாக்கும் நோக்கில் அஜீத் ரசிகை என்று கூறி பொய்யான தகவலை மீடியாக்களுக்கு கசியவிட்டுள்ளார் பர்சானா என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
இது குறித்து சுரேஷ் சந்திரா கூறும் போது ஒரு மாதத்திற்கு குறைந்த பட்சம் 5 பேருக்காவது சத்தமில்லாமல் உதவி செய்வதை அஜீத் வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் பர்சானா விவகாரத்தால் உதவி செய்யபோய் உபத்திரவமாகிவிட்டதே என்று அஜீத் வருத்தத்தில் இருப்பதாக தெரிவித்தார்.