நடிகர் விவேக்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, புகழ்பெற்ற நடிகர் விவேக்கின் மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சிரிப்போடு சிந்தனையும் கலந்த அவரது வசனங்கள் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும், திரைப்படங்களிலும் தம்முடைய வாழ்விலும் சுற்றுச்சூழல், சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர் விவேக் என்றும் அவர் கூறியுள்ளார். விவேக் மறைவால் வாடும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடிகர் விவேக்கின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்த தாக கூறியுள்ளார். அபார நடிப்பாற்றலால் மக்களின் மனங்களை கவர்ந்தவர் விவேக் என அவர் புகழாரம் சூட்டி உள்ளார். விவேக்கின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்த்த இரங்கலை கூறுவதாக அவர் தெரிவித்துள்ளர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றதாகவும், அற்புதமான நடிப்பு திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியதாகவும் கூறியுள்ளார். தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்த விவேக் அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாகத் தெரிவித்துள்ளார். சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர், இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர் விவேக் எனக் கூறியுள்ள முதலமைச்சர், விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விவேக் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். பல்கலை வித்தகராக விளங்கிய விவேக், தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் வழங்கியவர் எனக் கூறியுள்ள ஸ்டாலின், இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றும் ஆற்றல் படைத்த விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ என வேதனை தெரிவித்துள்ளார்.