நாகப்பட்டினம் மாவட்டத்தில் கர்ணன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள், ஓட்டலில் ஆர்டர் செய்த தோசையை வேறு ஒருவருக்கு கொடுத்ததால் ஊழியரின் காதை கத்தியால் அறுத்த விபரீதம் அரங்கேறி இருக்கின்றது
நாகப்பட்டினம் அடுத்துள்ள வெளிப்பாளையம் தேவி திரையரங்கில் கர்ணன் படம் பார்க்க சென்ற ரசிகர்கள் இருவர் அருகில் உள்ள கலா என்ற ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர்.
கர்ணன் படம் ஆரம்பிப்பதற்குள் தோசை சாப்பிட்டு விட்டு செல்லும் திட்டத்துடன் ஓட்டல் உரிமையாளர் மோகனிடம் விரைவாக தோசை கொண்டுவரச்சொல்லி ஆர்டர் செய்துள்ளனர். அப்போது தோசையை கொண்டு வந்த சப்ளையர் வேறு ஒரு டேபிலில் அமர்ந்திருந்தவர்களுக்கு தோசையை பறிமாரியதாக கூறப்படுகிறது. படம் ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லியும் எப்படி தோசை பக்கத்து டேபிளுக்கு சென்றது என்று ஆத்திரத்தில் கடை ஊழியரிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர்.
அத்தோடில்லாமல் தாங்கள் ஆர்டர் செய்த தோசையை எப்படி வேறு ஒருவருக்கு கொடுக்கலாம் என்று உரிமைக்குரல் எழுப்பிய இருவரும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ஊழியரோ, தோசை ஆர்டர் சொன்னது சரியாக கேட்கவில்லை என்று கூறியதால். ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சப்ளையர் பாஸ்கரனின் காதில் வெட்டியுள்ளனர்.
இதில் அவரது இடது பக்க காது ரெண்டாக கிழிந்தது. காயமடைந்த அவரை சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கர்ணன் படம் பார்க்க கத்தியுடன் வந்த ரசிகர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
காவல்துறையினர் விசாரணையில் அவர்கள் இருவரும் வெளிப்பளையம் பகுதியை சேர்ந்த ரவுடிகளான ஒன்றை அருண்குமார், சப்பை சிவா என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கர்ணன் காணும் ஆவலில் தோசைக்காக கையில் கத்தி ஏந்திய ரவுடி ரசிகர்கள் இருவரையும் காவல்துறையினர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலை பார்க்க வைத்துள்ளனர்.