கர்ணன் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கொடியன்குளம் சம்பவம் 1995 ஆம் ஆண்டு நடந்ததாகவும், அதனை 1997 ஆம் ஆண்டு நடந்ததாக தவறாக கூறப்பட்டிருப்பதை மாற்றக் கூறி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஜினியின் படம், விஜய்காந்த் பாட்டின் ஆவேச பீட்டு என கலங்கடித்த கர்ணனை வட்டமிடும், கலவர சர்ச்சை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
ரஜினியின் படம் போட்ட பனியன், விஜயகாந்தின் போராடடா.. வாளேந்தடா என்ற ஆவேச பாட்டின் பீட்டு என திரையரங்கை அதகளப்படுத்தி வருகிறார் கர்ணன் தனுஷ்..!
1995 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் கொடியன் குளத்தில் நடந்த உண்மைச் சம்பவம் என்று இணையதள விமர்சகர்கள் மூச்சுவிடாமல் பேசி கர்ணனின் இயக்குனரையும், தயாரிப்பாளரையும் தற்போது புதிய சர்ச்சைக்குள் சிக்க வைத்துள்ளனர்.
கொடியன் குளத்தை.... பொடியன் குளமாக மாற்றி, 1995 ஆம் ஆண்டு என்பதை 1997 முற்பகுதி என்று மாற்றி, சம்பந்தமில்லாத மணியாச்சி காவல் நிலைய தாக்குதலை கதைக்கு தக்கவாறு காட்சியாக்கி, கர்ணன் என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ், நாயகன் கையில் வாள் கொடுத்து அராஜக காவல் அதிகாரியின் கழுத்துடன் சேர்த்து படத்தையும் முடித்திருந்தார்..!
ஆனால் இதனை மறைத்து படத்தில் மாட்டின் நீல வர்ண கொம்பு தொடங்கி, தலைவர்கள் புகைப்படம் ஆடுவது வரை எல்லாம் குறியீடு என்றும், அந்த படத்தில் கூறப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் நிஜத்தில் நடந்தவை என்பது போலவும் சில யூடியூப்பர்களால் தகவல் பரப்பப்பட்டது.
இந்த நிலையில் உண்மையில் அந்த கலவரம் நடந்தது 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில்...! அப்படி இருக்க திமுக ஆட்சி காலமான 1997 ஆம் ஆண்டு நடந்ததாக எப்படி திரித்து கூற முடிந்தது ? என்று சமூக வலைதளபிரிவு திமுகவினர் கொந்தளித்தனர். பலர் இதற்காக தங்கள் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கர்ணன் படத்தை பார்த்தார், படம் சிறப்பாக இருப்பதாக பாராட்டினார், அத்தோடில்லாமல் படத்தில் 1995 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை 1997 ஆம் ஆண்டு நடந்தது போன்று கூறி இருப்பதை மாற்றும்படி இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தாணு ஆகியோரிடம் கூறியதாகவும் அவர்களும் அந்த தவறை இரு தினங்களில் சரி செய்து விடுவதாக உறுதி அளித்துள்ளதாகவும் உதயநிதி டுவிட்டர் மூலம் தெரிவித்தார்..!
நிமிர்ந்தாச்சி இனி எங்களால குனியமுடியாது என்று படத்தில் நாயகனுக்கு வீர வசனம் வைத்து ரசிகர்களிடம் மகத்தான வரவேற்பு பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ், 1997 ஆம் ஆண்டை மாற்ற போகிறாரா ? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..!