“ஒருமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுவது என்பதே கனவு என்கிற நிலையில், 2வது முறை தாம் தேசிய விருதை வென்றிருப்பது ஆசீர்வாதம்தான் என்றும் தாம் இந்த அளவுக்கு வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை” என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தாயார், தந்தை, அண்ணன் செல்வராகவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ், அந்தப் படத்தில் சிவசாமி கதாபாத்திரத்தைக் கொடுத்த இயக்குனர் வெற்றி மாறனுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா அலுவலகத்தில் வெற்றிமாறனை முதன்முறையாகச் சந்தித்தபோது அவர் தன் நண்பனாக, துணைவனாக, சகோதரனாக மாறுவார் என நினைத்துக்கூடப்பார்க்கவில்லை என தனுஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.