விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளை இழிவுப்படுத்திய எஸ்.ஏ. சந்திரசேகரனின் ஆதரவாளரான ஜெயசீலனை கண்டித்து விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். முக நூலில் எச்சரித்தவர்கள் கொடியுடன் வீதிக்கு வந்த பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
10 வருடங்களுக்கு முன்பு விஜய் மன்ற தலைவராக இருந்தவர் திருவொற்றியூரை சேர்ந்தவர் ஜெயசீலன். 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது விஜய் மன்றத்தில் இருந்து விலகிய ஜெயசீலன் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். பின்னர் விஷால் மன்ற தலைவராக பொறுப்பேற்ற ஜெயசீலன் விஜய்யை போல விஷாலை மாற்றுவேன் என கூறிவந்தார்.
தற்போது அ.இ.த.வி.ம.இ கட்சியை தொடங்க முயன்று, மகன் விஜய்யின் கோபத்திற்குள்ளாகி ஒதுங்கி இருக்கும் எஸ்.ஏ. சந்திரசேகரனின் ஆதரவாளராக உள்ள ஜெயசீலன், அண்மையில் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்தும், இயக்க செயல்பாடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இதற்கு முக நூலில் கண்டனம் தெரிவித்த விஜய் ரசிகர்கள் ஜெயசீலன் எச்சரித்து கடுமையான அர்ச்சனையில் ஈடுபட்டனர்
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஜெயசீலனை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் திரண்ட ரசிகர்கள் கண்டன கோஷம் எழுப்பினர்
கடலூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் பேரணியாக சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினரும் ஜெயசீலனுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர்
எஸ்.ஏ. சி ஆரம்பித்த கட்சியால் அவருக்கு நன்மை உண்டானதோ இல்லையோ, அவரது ஆதரவாளர்களால், அவருக்கும் , மகன் விஜய்க்கும் இடையேயான விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வது குறிப்பிடதக்கது..!