பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் எல்லாம் ஒர்த்தே இல்லை என்று இயக்குனர் ஜான்சன் உளறிக்கொண்டிருக்க, அவரின் பேச்சை தடுத்து நிறுத்திய நடிகர் சந்தானம், தன்னடக்கத்தால் இயக்குனர் தன்னைத் தானே ஒர்த்தே இல்லை என்று பேசுவதாக சமாளித்துவிட்டு, வா...! என்று மேடையிலிருந்து இயக்குநரின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.
நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி கதாநாயகனாக வளர்ச்சியடைந்த சந்தானம், ஜான்சன் இயக்கத்தில் பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னை சாலி கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஜான்சன், சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.
இசைவெளியீட்டு விழாவில் பேசிய சந்தானத்திடம் அரசியல் ஆசை உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிறிதும் யோசிக்காமல் ராஜ்யசபாவின் எம்பி பதவி தான் தனக்கு வேண்டுமென்ற சந்தானம், எம்பி பதவி தரும் கட்சிக்கு செல்ல தயார் என கிண்டலாக பதிலளித்தார்.
முன்னதாக மேடையில் பேசிய படத்தின் இயக்குனர் ஜான்சன், தான் எதற்குமே ஒர்த்தே இல்லை, தனக்கு ஒன்றுமே தெரியாது என்று பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் ஒர்த் இல்லை என்றால் உங்களின் படத்தை பார்க்க ரசிகர்கள் வர மாட்டார்கள் என செய்தியாளர்கள் தெரிவிக்க, அதற்கு சளைக்காமல் பதிலளித்த இயக்குனர், எனது படத்தை பார்க்க ரசிகர்கள் வரவில்லை என்றாலும் தனக்கு கவலை இல்லை என்றதுடன் தான் உண்மையிலேயே எதற்கும் ஒர்த் இல்லை என்று மீண்டும் அதே டயலாக்கை கூறினார்.
இயக்குனரின் இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த சந்தானம், மேடைக்கு வந்து அவரது பேச்சை பாதியிலேயே நிறுத்தியதுடன், தன்னடக்கத்தால் தன்னை ஒர்த்தே இல்லை என்று இயக்குனர் ஜான்சன் பேசுவதாக கூறி சமாளித்து விட்டு அவரை மேலும் பேச விடாமல் வா...! என்று கண்டிக்காத குறையாய் அழைத்து சென்றார்.
இயக்குனரின் உளறலும், சந்தானத்தின் கண்டிப்பும் இசை வெளியீட்டு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.