புஸ்சி ஆனந்த் என்பவரை பொறுப்பாளராக கொண்டு செயல்படும் விஜய் மக்கள் இயக்கத்தில் திரையரங்கு டிக்கெட் விற்பனை தொடங்கி போஸ்டிங் வரையில் லட்சக்கணக்கில் முறைகேடு நடப்பதாக அந்த இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஜெயசீலன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அ.இ.த.வி.ம.இ கட்சியை அறிவித்ததால் விஜய்யை விட்டு பிரியும் நிலைக்கு தள்ளப்பட்ட அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், தனது அரசியல் கட்சி எண்ணத்தை கைவிட்டு மகனின் அழைப்புக்காக காத்திருக்கிறார்.
இந்த நிலையில் புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்தை பொறுப்பாளராக கொண்டு தற்போது பரபரப்பாக செயல்பட்டு வரும் அ.இ.த.வி.ம.இ அமைப்பில் புதிய நிர்வாகிகள் நியமனம், ஆலோசனை கூட்டம் என்று விஜய்யின் பனையூர் அலுவலகம் களைகட்டி வருகின்றது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்த விஜய், தனது இயக்க நிர்வாகிகள் முண்டியடித்ததால் காரில் இருந்து இறங்க இயலாமல் அவதிப்பட்டதாக கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் காரில் இருந்து இறங்காமல் கூட்டத்தில் பங்கேற்காமலேயே திரும்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் அ.இ.த.வி.ம.இ அமைப்பின் தற்போதைய மாநில பொறுப்பாளர் புஸ்ஸி அனந்தால் நடிகர் விஜய்க்கு அலுவலகம் செல்ல இயலாத பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் தலைவர் ஜெயசீலன் என்பவர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு இதே போல விழுப்புரத்திற்கு அழைத்துச்சென்று சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடும் நிலைக்கு விஜய்யை தள்ளியவர் புஸ்ஸி ஆனந்த் என்றும் சுட்டிக்காட்டினார்
ஊழலை எதிர்க்கும் கொள்கை கொண்ட நடிகர் விஜய்யை ஏமாற்றி, தற்போதைய விஜய் மக்கள் இயக்க தலைவர்கள் மூலம் மாஸ்டர் படத்தின் காட்சிகளை மொத்தமாக திரையரங்கு உரிமையாளர்களிடம் குத்தகைக்கு எடுத்து 100 ரூபாய் டிக்கட்டை 1000 ரூபாய்க்கு ரசிகர்களிடம் விற்று லட்சகணக்கில் லாபம் பார்த்ததாகவும், அந்த பணத்தில் பங்கு வாங்கிக் கொண்டு மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை புஸ்ஸி ஆனந்து நியமித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் பெற புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டோம் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை, விஜய் மக்கள் இயக்க பொறுப்பில் உள்ள தற்போதைய மூத்த நிர்வாகிகள் கூறும் போது, விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையிலான பிரிவு தற்காலிகமானது என்றும் 14 வருடங்களாக மன்ற தலைவராக இருந்த ஜெயசீலன் 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மன்ற பொறுப்பில் இருந்து விலகியவர் என்றும் தற்போது எஸ்.ஏ. சந்திரசேகரனுடன் இணைந்து கட்சி தொடங்க முயன்று, திட்டம் தோல்வி அடைந்ததால், விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்து மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதாக கூறினர்.
தந்தையும் மகனும் இணைகிறார்களோ, இல்லையோ, விஜய் மக்கள் இயக்கத்தின் ரகசியங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருவதால் விஜய் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்..!