இந்திய திரையுலக வரலாற்றில் யூடியூப்பில் வெளியான 24 மணி நேரத்தில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் கே.ஜி.எப் சேப்டர் 2 படத்தின் டீசரில் இடம் பெற்றுள்ள முக்கிய காட்சிகள் மற்ற படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். காப்பி காட்சிகளுக்கு இவ்வளவு பில்டப்பா என்று வறுத்தெடுக்கும் வலைதளவாசிகளின் விமர்சனம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
கன்னட திரை உலகை கே.ஜி.எப்புக்கு முன் கேஜிஎப்புக்கு பின் என்று பிரிக்கும் அளவுக்கு சர்வதேச தரத்திலான காட்சி அமைப்புடன் வெளியான ஆக்சன் படம் கே.ஜி.எப்..!
கே.ஜி.எப்பின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து கே.ஜி.எப் சேப்டர் 2 கன்னட நடிகர் யாஸ் மற்றும் சஞ்சய் தத் கூட்டணியில் விரைவில் வெளியாக உள்ளது. இதன் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
லைக்குகளை அள்ளி குவித்து வரும் ராக்கிபாயின் இந்த டீசர் இந்திய திரையுலகின் மற்றோரு பிரமாண்ட படைப்பு என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் 2 நிமிட டீசரில் இடம் பெற்றுள்ள முக்கிய காட்சிகள் அனைத்தும் பழைய படங்களில் இருந்து சுடப்பட்டவை என்றும், அவற்றை காப்பியடித்து இயக்குனர் பிரசாந்த் நீல், நாயகன் யாஷுக்கு மாஸ் ஏற்றி இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.
ஹாலிவுட் படத்தின் பாதிப்பில் உருவான கைதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் கார்த்தி கையில் வைத்து எதிரிகளை சுட்டுதள்ளும் மெஷின் கண் காட்சியையும் , எந்திரன் படத்தில் ரஜினியின் துப்பாக்கி தாக்குதல் காட்சியையும் சுட்டு, யாஸ் போலீஸ் ஜீப்பை சுடும் காட்சி வைக்கப்பட்டிருப்பதாக தோழமையுடன் சுட்டுகின்றனர்.
நாயகன் யாஸ் தீயினால் சிவக்க பளுத்திருக்கும் துப்பாக்கி குழாயில் சிகரெட் பற்ற வைக்கும் காட்சி, பல வருடங்களுக்கு முன்பு வெளியான ஹாலிவுட் படம் ஒன்றில் இருந்து அப்படியே சுட்டு இருப்பதற்கு இந்த படமே சாட்சி..! என்கின்றனர்.
நாயகி பலர் மத்தியில் தலைவிரி கோலமாய் டைட் மேக்கப்புடன் நிற்கும் காட்சியும் கேமரா கோணமும் , பத்மாவதி படத்தில் தீபீகா படுகோனேவின் சாயல் என்று சுட்டுகின்றனர் நெட்டிசன்கள்.
ஆரம்பத்திலும் இறுதியிலும் வரும் தாய் மகன் செண்டிமெண்ட் காட்சிகள் அனைத்தும் பாகுபலி தொடங்கி சத்ரியன் , நம்ம அண்ணாச்சி, புதியபாதை என பழைய மசாலா படங்கள் பலவற்றின் பிளாஸ்பேக் காட்சிகளின் கூட்டுக்கலவை என்று சமூக வலைதளவாசிகள் வறுத்தெடுக்கின்றனர்
அது பழசோ, புதுசோ, கட்டோ... ,காப்பியோ.., பேஸ்ட்டோ... அதனை பரிமாறும் விதம் என்ற ஒற்றை விஷயத்தில் கே.ஜி.எப் டீசர் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்து தனிக்கவனம் பெற்று விட்டது என்பதே உண்மை..!