திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளிலும் பார்வையாளர்களை அனுமதிப்பதை உயர்நீதிமன்றம் ஏற்கமறுத்துவிட்டது.
தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தான் 100 சதவீத இருக்கைகளை அனுமதித்ததாக அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, தடுப்பு மருந்து வரும் வரை பொறுமையாகவும், குழந்தைகளை போலவும் மெல்ல அடியெடுத்து வைக்க வேண்டுமெனவும் அரசுக்கு அறிவுறுத்தினர்.
கல்வி நிலையங்களை திறக்க அனுமதிக்காத நிலையில் திரையரங்குகளில் மட்டும் 100 சதவீத அனுமதி என்பது நல்லதல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
50 சதவீத இருக்கைகளுடன் செயல்படும் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். சென்னையில் தொடரப்பட்ட இந்த வழக்கையும், மதுரை கிளையிலேயே சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.