உடல் நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரபோவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில் 40 ஆண்டுகாலம் சினிமாவிலும், மேடை பேச்சிலும் ரஜினியின் அரசியல் அதகளத்தால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மாவீரன் படத்தில் உணர்ச்சி பொங்க நடித்து ரசிகர் படையை திரையரங்கில் ஒன்று திரட்டியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
எம்.ஜி.ஆரை இழந்து தவித்த தமிழகத்தில், இனி தன் கொடியை ரஜினி பறக்கவிட போகிறார் என்று ரஜினிக்காக சில்லரையை சிதறவிட்ட ரசிகர்கள் பலர்..!
அடுத்தடுத்த படங்களில் தன்னை ராஜாதிராஜாவாகவும், தளபதியாகவும், மன்னனாகவும் காட்டிக் கொண்டாலும் ரஜினி காந்த் தனக்கு கட்சியும், கொடியும் வேண்டாம் என்று சொல்லவும் தவறவில்லை.
1992 ஆம் ஆண்டில் வெளிவந்த அண்ணாமலை படத்தின் மூலம் அரசியல்வாதிகளுக்கு எதிராக பேசிய வசனம் ரசிகர்களின் நரம்புகளை முறுக்கேற்றியது.
அடுத்த ஆண்டில் வெளி வந்த எஜமானில் வேட்டி சட்டையுடன் தோன்றி அவர் நடத்திய அதகளத்தில் தலைவர் அரசியலுக்கு வரபோகிறார் என ரசிகர்கள் குதுகலத்தில் ஆழ்த்தியது..!
தனது சொந்த தயாரிப்பில் வெளியான வள்ளி படத்தில் கூட இலவச வேட்டி சேலை வழங்கும் அரசியல் வாதிகளை கலாய்த்தார் ரஜினி.
பாட்ஷா பட வெற்றி விழாவில் ரஜினியின் பேச்சு அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக சட்ட மன்ற தேர்தலில் திமுக, த.மா.கா கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி கொடுத்த வாய்ஸ் முக்கியத்துவம் பெற்றது
முத்து படத்தில் பேசிய எப்ப வருவேன் எப்படி வருவேன் என்ற டயலாக் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்தாலும், கட்சியெல்லாம் இப்ப நமக்கெதற்கு என்று கேள்வி எழுப்பி இருந்தார் ..!
குசேலன் படத்தின் மூலம், தான் படத்தில் பேசிய அரசியல் வசனங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற காட்சி இடம்பெற்றது..!
2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பால் கடுமையாக உடல் நலம் குன்றினார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரசிகர்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்து தமிழகம் திரும்பினார்.
தொடர்ந்து படங்களில் நடித்தாலும், தமிழக அரசியலில் ஜெயலலிதா, கருணாநிதி என இரு ஆளுமைகளின் மறைவால் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறி அரசியலுக்கு வருவதாக 2017 ஆண்டு முதன் முறையாக பொது வெளியில் அறிவித்தார் ரஜினிகாந்த்.
ஒருபக்கம் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னேற்பாடாக ரஜினி மக்கள் மக்கள் மன்றம் மூலம் ஒவ்வொரு வார்டு வாரியாக பூத் கமிட்டி அமைக்கும் பணியை முடுக்கி விட்டார். கடந்த மார்ச் மாதம் திடீரென லீலா பேலஸில் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டால் தான் அரசியலுக்கு வருவேன் என அடித்து கூறினார்.
இந்த நிலையில் கடந்த 3 ந்தேதி இப்ப இல்லைன்னா எப்பவும் இல்லை, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என கூறி அரசியலுக்கு வருவது உறுதி என்று மீண்டும் அதிரடியாக அறிவித்தார் ரஜினிகாந்த். 31 ந்தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கப்போவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ரஜினிக்கு ரத்த அழுத்த மாறுபாடு ஏற்பட்டது. இரு தினங்கள் அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, இதை கடவுளின் எச்சரிக்கையாக கருதி, உடல் நிலை காரணமாக அரசியலுக்கு வரபோவதில்லை என்று அறிவிப்பு வெளியிட்டு அவரது ரசிகர்களை கண்கலங்கவைத்துள்ளார்.
ரஜினி மிகவும் நேர்மையாக இந்த அறிக்கையை வெளியிட்டு இருப்பதாக கருதிய ரசிகர்கள் அவர் நலமுடன் இருந்தாலே போதும் என்று பொறுமை காத்து வருகின்றனர்.
மொத்தத்தில் இனி அரசியல் இல்லை என்ற ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.