சித்ரா தற்கொலைக்கு, முன்னாள் காதலர்கள் மிரட்டலோ அல்லது அவருக்கு பழக்கமான அரசியல்வாதிகள், முதலீடு செய்த தொழிலதிபர்கள், சினிமா நபர்கள் மிரட்டலோ காரணமாக இருக்கலாம் என்று சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் தந்தை பரபரப்புக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், சமூக வலைதளங்களின் மூலம் சித்ரா குறித்து தனக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றுள்ளதாகவும், சித்ரா மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றும், விஜய் டிவியின் தொகுப்பாளர் ரக்சன் என்பவர் டேட்டிங்கில் எடுத்த நெருக்கமான புகைப்படங்களை வைத்துக் கொண்டு மிரட்டியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு சென்னை திருவான்மியூரில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியதாகவும் சுமார் ஒருகோடி ரூபாய்க்கு ஆடி கார் வாங்கிதாகவும் அதற்கான முதலீட்டுக்கு அவருக்கு தெரிந்த நபர்கள் உதவியதாகவும் மீதமுள்ள தொகையினை மாத தவணையாக அடைத்தும் வந்துள்ளார் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் சித்ராவுக்கு பழக்கம் என்பதாலேயே திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த சித்ரா முடிவு செய்தார் என்றும் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
முக்கிய அரசியல்வாதியுடன் சித்ரா தினமும் மணிக் கணக்கில் பேசியதாகவும், பல ஆதாரங்களை கொடுத்து திருமணத்தை நிறுத்தி அசிங்கப்படுத்தப் போவதாக அவர் மிரட்டியதாகவும் தொடர்ந்து செய்தி வருவதாகவும் மனுவில் கூறியுள்ளார். மிகவும் பிரபலமான நடிகை, ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளார் என்பதால், அவருக்கு முதலீடு செய்த மற்றும் பழக்கம் உள்ள பெரிய நபர்கள், சினிமா நபர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் சித்ராவுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளனர் என்றும், திருமணம் நடந்தால் பிரபலம் குறையத் தொடங்கிவிடும் என மிரட்டல் வந்திருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். சித்ரா தங்கியிருந்த பிளசன்ட் ஸ்டே ஹோட்டலில் சிசிடிவி கேமிரா பதிவுகள் அழிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சில தொலைபேசி எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சித்ரா பதற்றத்துடன் தனியாகச் சென்று பேசுவார் என்றும், பின்னர் அந்த எண்களை அழித்துவிடுவார் என்றும் ஹேமந்த் தன்னிடம் கூறியுள்ளதாக ரவிச்சந்திரன் கூறியுள்ளார். எனவே சித்ரா தொலைபேசி அழைப்பு விவரங்களை திரட்டி, திருமணம் செய்தால் பின்விளைவுகள் ஏற்படும் என மிரட்டிய நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
சித்ராவிற்கு மிரட்டல் அல்லது பாலியல் மிரட்டல் கொடுத்த நபர்களுக்கு பயந்து, சித்ராவின் தாயார் அமைதி காப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, தனது மகனை விடுவிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், தனது மகன் ஹேமந்த்-சித்ரா இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும், சித்ரா கூறித்தான் இரு வீட்டார் சம்மதத்துடன் பதிவுத் திருமணம் நடைபெற்றதாகவும், திருமணத்திற்கு மண்டபம் பார்த்து மகிழ்ச்சியாக இருந்ததாகவும் தெரிவித்தார். சித்ரா கடைசியாகப் பேசியது தன்னிடம்தான் என்று கூறப்படுவதும் தவறான தகவல் என அவர் மறுத்தார்.