மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த இரு டிரம்செட் குழுவினர், தமிழ் சினிமா ஒன்றில் வருவது போல யாருடைய டிரம் செட் பெரியது என தங்களுக்குள் மோதிக் கொண்ட சம்பவம் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. தாளம் போட வந்தவர்கள் சண்டை போட்டதால் டிரம்செட்கள் கிழிந்து தொங்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
வடிவேலுவின் நடிப்பில் கோவில் படத்தில் தப்பு பெருசா? பேண்டு பெருசா ? என்று இரு வாத்தியக் முழுவினர் மோதிக்கொள்ளும் நகைச்சுவை காட்சி வெகு பிரபலம்.
இதே போன்ற சம்பவம் ஒன்று திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில், கமல்ஹாசன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த இரு குழுக்களிடையே அரங்கேறியது. கமல் ஹாசன் வந்து சென்ற பின்னர், பேண்டுசெட் வாசிப்பதில் யார் பெரியவர் ? என்று திண்டுக்கல் மற்றும் பழனியைச் சேர்ந்த இரு டிரம்செட் குழுவினர் இடையே ஏற்பட்ட போட்டி இறுதியில் கைகலப்பானது
ஃபேண்டு வாசிக்கும் குச்சிகளால் இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக் கொண்டதோடு டிரம்செட்களை அடித்து உடைத்தனர். இதனால் டிரம்செட்டுகள் கிழிந்து தொங்கியது
திடீரென ஏற்பட்ட மோதலால் செய்வது அறியாது திகைத்த தொண்டர்கள் நாலாபுறமும் சிதறி ஓடிய நிலையில், போலீசார் ஃபேண்டு வாத்திய கலைஞர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்
தமிழகத்தை சீரமைப்போம் என்ற நிகழ்ச்சிக்கு தாளம் போட வந்தவர்கள், தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டதால், சேதம் அடைந்த தங்களது டிரம்செட்டுகளை சீரமைக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டனர்.