சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ள நிலையில் அவரது செல்போனுக்கு வந்த வாட்ஸ் அப் தகவல்கள் மூலம் அவருக்கு சிலர் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சித்ராவுடன் கடைத் திறப்பு விழாவில் பங்கேற்ற அரசியல் பிரமுகர் சர்ச்சையில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..
சின்னத்திரையில் முல்லையாக மலர்ந்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக பிணக்கூறாய்வு அறிக்கையும், காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், வருகிற ஜனவரி மாதம் 13 ந்தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தேதி ஒதுக்கிக் கொடுத்த நடிகை சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியது யார் ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சித்ரா இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தி வந்த செல்போன் நம்பர் மாயமானதாக கூறப்படுகின்றது.
முன்னதாக சித்ராவின் செல்போனை ஆய்வு செய்ததில் தினேஷ் என்ற நபரிடம் இருந்து அதிக அழைப்புகள் மற்றும் வாட்ஸ் அப் தகவல்கள் வந்திருந்ததை யடுத்து தினேஷ் குறித்து விசாரித்த போது அவர் சித்ராவுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக பணி செய்து வந்தவர் என்பது தெரியவந்தது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்த சித்ரா, சின்னத்திரை மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் கடைதிறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வந்துள்ளார். தன்னுடைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்காக தினேஷ் என்ற நபரை அவர் பிரத்யேகமாக நியமித்திருந்ததாக கூறப்படுகின்றது.
அக்டோபர் மாதம் 19 ந்தேதி காதலன் ஹேம்நாத்தை பதிவு திருமணம் செய்து கொண்ட சித்ரா, கடந்த அக்டோபர் மாதம் 21 ந்தேதி பெரம்பலூரில் பரிசுப் பொருள் விற்பனையகத்தின் திறப்பு விழாவுக்கு செல்ல தேதி ஒதுக்கி உள்ளார்.
அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திதர தினேஷ் அழைத்துள்ளார். அவருடன் உடன் சென்று மக்கள் கூட்டத்தில் மிதந்த சித்ராவை பாதுகாப்பாக அழைத்துச்சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் தனி தொகுதி எம்.எல்.ஏ இளம்பை தமிழ்செல்வனும் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது. நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் உரையாடி செல்பி எடுத்துக் கொண்டுள்ளார் சித்ரா.
பொங்கலுக்கு பின்னர் தனது காதல் கணவர் ஹேமந்தை ஊரறியத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்த சித்ரா, அதற்கு முன்பாக ராமநாதபுரத்தில் ஜனவரி மாதம் நடக்கவிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வருவதாவும் ஒப்புக் கொண்டதாகவும், அதற்கு மறு நாள் யாரும் எதிர்பாராத வகையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் தெரிவித்தார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் சித்ரா பயன்படுத்தியது தன்னுடைய செல்போன் நம்பர் தான் என்று கூறிய தினேஷ் அந்த செல்போன் தன்னிடம் தான் உள்ளது என்றும் காவல்துறையினர் கேட்கும் பட்சத்தில் அவர்களிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கடைத்திறப்பு விழாவுக்காக பெரம்பலூருக்கு சென்று வந்த பின்னர் சித்ராவின் செல்போன் வாட்ஸ் அப்புக்கு அரசியல் பிரமுகர் ஒருவரிடம் இருந்து தொடந்து குறுந்தகவல் வந்ததாகவும், இந்த புத்தாண்டை தன்னுடன் கொண்டாட வேண்டும் என்று அவர் சித்ராவை வற்புறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
அவர் மட்டுமல்லாமல் மேலும் சிலரிடம் இருந்து வந்த சர்ச்சைக்குரிய குறுந்தகவல்களை வைத்து அவர்களிடமும் விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் பல பெண்களுடன் பப்புகளில் சுற்றி வந்த குற்றச்சாட்டுக்குள்ளானவரும் ஏற்கனவே திருமணமானவருமான ஹேம்நாத்தை தோழிகளின் எச்சரிக்கையை மீறி சித்ரா பதிவு திருமணம் செய்து கொண்டதோடு, பெற்றோரை வற்புறுத்தி ஊரறியத் திருமணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏராளமான தொடர்பு எண்கள் போலீசாரின் கைகளின் சிக்கி இருப்பதால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தொல்லை கொடுத்த நபர் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.