டிவி நடிகை சித்ரா, மரணத்தைத் தழுவியபோது, அவரை பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேம்நாத், எங்கே இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பது குறித்த பரபரப்பான தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். சித்ராவுடன் இறுதியாக பேசியது யார்? என்ற விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.
நடிகை சித்ராவின் மரணம், திரையுலகைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரையும், உலுக்கியிருக்கிறது.
நடிகை சித்ராவை, கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டு, அவருடனேயே வலம் வந்த, காதல் கணவர் ஹேம்நாத் மீது அழுத்தமாகவே, சந்தேக ரேகை படிந்தது.
சம்பவத்தன்று, நள்ளிரவு 12 மணியை கடந்தும், படபிடிப்பு தொடர்ந்ததாகவும், ஸ்டார் ஹோட்டல் வில்லாவிற்கு, அதிகாலை 2 மணி அளவில் வந்ததாகவும், ஹேம்நாத் கூறியுள்ளதாக, போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
காரில் வந்தபோதும், காரில் இருந்து இறங்கிய பின்னர், வில்லாவிற்குள் சென்று, ஹாலில் சித்ரா சோகமாக அமர்ந்திருந்ததாகவும், ஹேம்நாத் தெரிவித்துள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
திடீரென எழுந்த சித்ரா, காரில் இருந்த டாக்குமெண்டை எடுத்து வருமாறு கூறியதாகவும், அதை எடுக்கச் சென்றபோது, குளியலறையுடன் கூடிய, சொகுசு படுக்கையறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டதாக, ஹேம்நாத் கூறியதாக, போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
காரிலிருந்து டாக்குமெண்டை எடுத்து வந்த நிலையில், கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால், ஹோட்டல் ஊழியர் கணேசன் கொண்டு வந்த மாற்றுச் சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது, சித்ரா தூக்கில் தொங்கியதை பார்த்ததாக, ஹேம்நாத் கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, முதலுதவி அளிக்கவே, சித்ராவை மீட்டு, படுக்கையில் கிடத்தியதாகவும், ஹேம்நாத் கூறியதாக, போலீசார் தரப்பில், தகவல் வெளியாகியுள்ளது.
சித்ராவின் மரணத்திற்கு காரணம்., அவரது நடிப்புத் தொழில் சார்ந்த பிரச்சனையா? குடும்பப் பிரச்சனையா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபிலிம் சிட்டியில் இருந்து படபிடிப்பை முடித்துக் கொண்டு, ஹேம்நாத்துடன் திரும்பிய சித்ரா ஏன் சோகமாக இருந்தார்.? அவருடன், செல்போனில் கடைசியாக பேசியது யார் என்பதை கண்டறிய, சைபர் கிரைம் போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சித்ராவின் செல்போனில் உள்ள தகவல் படி, இறுதியாக, தனது தாயாரிடம் பேசியதாக தெரியவந்தாலும், அதன்பிறகு, வேறு யாருடனும் அவர் பேசினாரா? அவ்வாறு பேசியபின், தொடர் கொண்டவரின் பெயரை டெலிட் செய்துவிட்டரா? என்ற கோணத்திலும், போலீசார் விசாரிக்கின்றனர்.
இதற்கிடையே, சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும் வருகிற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி, திருமணம் செய்ய முடிவெடுத்து, இருவீட்டார் சம்மதத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி, நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
இந்தச்சூழலில் தான், கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில், சித்ராவுக்கும், ஹேம்நாத்துக்கும், அக்டோபர் மாதம் 19ஆம் தேதி, அவசர, அவசரமாக பதிவுத் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த அவசரத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரிப்பதாகவும், திருமணத்தை ஒத்திவைக்க, ஒருதரப்பு முயன்றதாலேயே, பதிவு திருமணம் நடந்திருக்க கூடும் என, போலீசார் தரப்பில் கூறப்படுகின்றது.
ஹேம்நாத் நடவடிக்கைத் தொடர்பாக, சில பல ஐயங்களை எழுப்பிய, சித்ரா குடும்பத்தினர், திருமணத்தை ஒத்திவைக்க முயன்றதாகவும், சொல்லப்படுகிறது.
சித்ரா, கடந்த ஒன்றாம் தேதி திருவான்மியூர் வீட்டில் இருந்துள்ளார். அன்றைய தினமே, ஹேம்நாத்தின் பூந்தமல்லி வீட்டிற்கு வந்த சித்ரா, அங்கு தங்கியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அங்கும் தொடர்ந்து தங்காத நிலையில் தான், ஸ்டார் ஹோட்டல் வில்லாவில், கடந்த 4ஆம் தேதி முதல், சித்ராவும், தாமும் தங்கியதாக, ஹேம்நாத் போலீசில் கூறியதாக சொல்லப்படுகிறது.
பிசியான சூழலுக்கு நடுவே, சித்ரா தனது தாயாரிடம் தொடர்ச்சியாக பேசியது, தெரியவந்திருப்பதாக, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
சம்பவ நாளில், மரணத்தை தழுவுவதற்கு முன், சித்ரா, தனது தாயாரிடம் பேசியதாக கூறப்படுவதால், அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது....