பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனுக்கு இன்று 101-வது பிறந்தநாள்... திரைப்படங்களில் காதல் மன்னனாக நடித்து ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட நாயகனைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு...
1950-களின் இறுதியில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் தமிழ்த் திரைப்படங்களில் கோலோச்சிய காலம். அந்த காலகட்டத்தில் இயல்பான உணர்வுகளுக்கும், காட்சி மொழிக்கும் முன்னுரிமை அளித்து எடுக்கப்பட்ட படம் கல்யாணப் பரிசு. கவித்துவமான நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருப்பார் ஜெமினி கணேசன்.
வஞ்சிக் கோட்டை வாலிபனில், போட்டி மனப்பான்மை கொண்ட இரு பெண்களுக்கு இடையே சிக்கித் தவிக்கும் குறும்பு இளவரசன் வேடத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார் ஜெமினி...
காதலை கவுரவப்படுத்தும் வகையில் ஜெமினியின் நடிப்பு அமைந்திருந்ததால், அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி, ஜெயந்தி ஆகியோர் ஜெமினியுடன் அதிகமான படங்களில் ஜோடியாக நடித்தனர்.
சாவித்ரியுடன் மனம்போல மாங்கல்யம் படத்தில் இணைந்து நடித்த ஜெமினி அவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகும் இருவரும் பாசமலர், பாதகாணிக்கை, ஆயிரம் ரூபாய், யார் பையன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இருவரும் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படம் மிஸ்ஸியம்மா.
பாசமலர், பாவமன்னிப்பு, பார்த்தால் பசி தீரும், வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்ற படங்களில் ஜெமினியும் சிவாஜி கணேசனும் போட்டி போட்டு நடித்ததால் ரசிகர்களுக்கு அவை விருந்தாக அமைந்திருந்தன.
கொஞ்சும் சலங்கை படத்தில் காருகுறிச்சி அருணாச்சலம் நாதஸ்வர இசையில் அற்புதமான முகபாவங்களை காட்டி நடித்திருப்பார் ஜெமினி.
தமிழில் 97 படங்களில் நடித்துள்ள ஜெமினி, இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் நடித்த படம் அவ்வை சண்முகி. ஜெமினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல், ஸ்ரீதேவி போன்றவர்கள் பிற்காலத்தில் புகழ்பெற்று விளங்கினர்.
பத்மஸ்ரீ விருதை அளித்து கவுரவப்படுத்திய மத்திய அரசு, ஜெமினியின் நினைவாக தபால் தலையும் வெளியிட்டது. எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருந்தாலும், காதல் மன்னன் என்றால் அது ஜெமினி ஒருவரையே குறிக்கும். அந்த அளவுக்கு திரையுலகில் முத்திரை பதித்து என்றென்றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறார் ஜெமினி கணேசன்...