எஸ்.ஏ.சந்திரசேகரன் தொடங்கியுள்ள அ.இ.த.வி.ம.இ கட்சிக்கு தனது ரசிகர்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த நடிகர் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். கடைசிவரை விஜய் அங்கு வராததால், சாப்பாடுகூட கிடைக்காமல் காத்திருந்து நொந்துபோன நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது.
அ.இ.த.வி.ம.இ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், புஸ்ஸி ஆனந்து கட்டுப்பாட்டில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே விஜய்யால் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை தன்னுடன் வைத்திருக்கும் எஸ்.ஏ.சி, தனது மகனை எப்படியும் சமாதானப் படுத்திவிடலாம், தனது கட்சிக்கு வாருங்கள் நல்ல பதவி தருகிறேன் என்று ரசிகர்களுக்கும் ஆசைகாட்டி வலை விரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த தகவல் அறிந்த நடிகர் விஜய், தனது ரசிகர்கள் ஒருவர் கூட தந்தையின் ஆசை வார்த்தையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்து மூலம் மாவட்ட நிர்வாகிகள் 50 பேரை அழைத்து ரகசிய ஆலோசனை நடத்த திட்டமிட்டார்.
ரசிகர்கள் பனையூரில் விஜய்யின் வீட்டிற்கு அருகில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு வந்திருக்கும் தகவல் அறிந்து செய்தியாளர்கள் அங்கு விரைந்தனர். மீடியாக்கள் வந்திருப்பதை அறிந்ததும் விஜய் மக்கள் இயக்க பங்களாவின் கதவுகள் மூடப்பட்டது. 10 மணிக்கு பின்னர் வந்த மாவட்ட நிர்வாகிகளும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. உள்ளே சென்ற நிர்வாகிகளிடம் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டனர்.
விஜய் வருவார் என்று வழிமேல் விழிவைத்து காத்திருந்த மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் வராததால் சோர்வடைந்தனர். அவர்களுக்கு மதிய சாப்பாடு ஏதும் வழங்கப்படாததால் தங்கள் செல்போன்களை பெற்று வெளியில் இருந்து அவர்களது நண்பர்கள் மூலம் சாப்பாடு ஆர்டர் செய்து வரவழைத்தனர். அந்த சாப்பாட்டை கொடுப்பதற்கும் விஜய் மக்கள் இயக்க பங்களா கதவுகள் திறக்கப்படாததால் நொந்து போன நிர்வாகிகள் நீண்ட நேர காத்திருப்பு பின்னர் சாப்பாடு பார்சல்களை பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
எப்படியும் விஜய் தங்களை சந்திப்பார் என்று ஆவலோடு காத்திருந்த 50 நிர்வாகிகளையும் மாலை வரை காத்திருக்க வைத்ததோடு, நொந்து போன அந்த நிர்வாகிகளிடம் இன்னொரு நாள் விஜய் சந்திப்பார் என்று ஆறுதல் கூறி வெளியே அனுப்பி வைத்தனர். தான் ஏற்பாடு செய்த ரகசிய கூட்டத்தை பற்றி மீடியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் தான் விஜய் அங்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது.
ஆலோசனை கூட்டத்துக்கு மட்டுமல்ல அரசியல் தொடர்பாக நடிகர் விஜய் எடுக்கும் முடிவுக்காகவும் அவரது ரசிகர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்