இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் தனது மகன் விஜயை மட்டுமல்ல, மனைவி ஷோபாவையும் ஏமாற்றி கட்சி தொடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஷோபா அறிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் டுவிஸ்ட்டுகள் நிறைந்த திரைக்கதையால் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து தப்பிப்பது எப்படி என்று படம் எடுத்து திரைத்துறையில் வெற்றி கண்டவர் புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரன்..!
ஆனால் அரசியல் கட்சி தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளாக அவரது நிஜ வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் ஒவ்வொன்றும் டுவிஸ்ட்டுகே டுவிஸ்ட்டாக இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கடுமையான மனக்குழப்பதிற்கு தள்ளப்பட்டுள்ளார் எஸ்.ஏ. சந்திர சேகர்..!
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியதாக அவர் தெரிவித்த அரை மணி நேரத்தில் தனது தந்தையின் கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை, தனது ரசிகர்கள் யாரும் தனது தந்தையின் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என அறிக்கை மூலம் அதிர்ச்சியூட்டினார் விஜய்.
ஆனாலும் அடங்காத எஸ்.ஏ சந்திர சேகரன், ஒரு குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சியை மட்டும் தனியாக அழைத்து தனது கட்சியின் கொள்கைகளை விளக்கிக் கொண்டிருந்தார். இந்த தகவல் அறிந்து மற்ற மீடியாக்களும் அங்கு திரண்டதால் பொறியில் சிக்கிய எலியாக, செய்தியாளர்களிடம் சிக்கி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சமாளிப்பு பதில்களுடன் சாப்பாடு முக்கியம் என்று எஸ்கேப்பானார்.
அடுத்த சில மணி நேரத்தில் எஸ்.ஏ.சிக்கு எதிராக அவரது மனைவியும், அ.இ.த.வி.ம.இ கட்சியின் பொருளாளருமான ஷோபா சந்திரசேகர் திடுக்கிடும் புகார்களை தெரிவித்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதில் தனது மகன் விஜய்க்கு துளியும் விருப்பம் இல்லையென்றும், தனது கணவர்தான் பிடிவாதமாக அவ்வப்போது விஜய் அரசியலுக்கு வருவது போல வெளியில் பேசிக்கொண்டு இருந்ததால் அவருடன் பேசுவதையே விஜய் நிறுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார் ஷோபா.
அதோடில்லாமல் தற்போது கூட புதிய கட்சி தொடங்குவதை தன்னிடம் தெரிவிக்காமல் ஏதோ அசோசியேசன் தொடங்க போகிறோம் என்று ஏமாற்றி கையெழுத்து பெற்றுக் கொண்டு, தன்னை புதிய கட்சிக்கு பொருளாளராக நியமித்துள்ளதாக குமுறியுள்ள ஷோபா, தனது மகனுக்கு விருப்பமில்லாத எந்த ஒரு செயலையும் நான் செய்வதில்லை என்பதால், தனது கணவரின் கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் தீபாவின் கணவர் மாதவனின் கட்சிக்கு பின்னர் தொடங்கிய ஒரே நாளில் குடும்பத்தினரால் முடங்கியது நம்ம புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரனின் அ.இ.த.வி.ம.இ கட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது..!