நடிகைகள் தீபிகா படுகோன், ஸ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் ஆகியோரிடம் பல மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் நடிகைகளின் செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான போதைப் பொருள் விவகாரத்தில் போதை மருந்து பயன்படுத்தியது குறித்த விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே நடிகை ரியா சக்ரபோர்த்தி உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் குறித்த விசாரணை நடத்திய அதிகாரிகள் ரியா அளித்த வாக்குமூலத்தின் படி முன்னணி நடிகைகள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உட்பட 50 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் .
நேற்று முன்னணி நடிகைகள் 4 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. தீபிகா படுகோனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவர் போதைப் பொருள் வாங்க குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து விசாரித்தனர்.
சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணையில் தமக்கு போதைப் பொருள் பழக்கம் இல்லை என்று தீபிகா படுகோன் மறுத்துள்ளார். தீபிகாவின் பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் இன்றும் அவரிடம் விசாரணை தொடரலாம் என்று கூறப்படுகிறது.
இதே போன்று நடிகைகள் ஸ்ரத்தா கபூர், ரகுல் ப்ரீத் சிங்கிடமும் திகாரிகள் தனித்தனியாக 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். சுஷாந்த்துடன் கேதார் நாத் படத்தில் நடித்த சாரா அலிகான் தாய்லாந்து படப்பிடிப்பின் போது நடிகருடன் மிகவும் நெருங்கிப் பழகியதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
போதைப் பொருள் பழக்கம் குறித்து அவரிடமும் அதிகாரிகள் பல மணி நேரம் விசாரித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகைகளின் செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ள போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அவற்றை ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். அதில் போதைப் பொருள் தொடர்பான தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தால் அவற்றை தடயவியல் துறையின் உதவியுடன் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.