மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததாலேயே எஸ்.பி.பியை காப்பாற்ற முடியவில்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட எஸ்.பி.பிக்கு, கடந்த மாதம் வரை வேறு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், மிக ஆரோக்கியமான வாழ்க்கை முறையையே அவர் கடைபிடித்ததாகவும் கூறியுள்ளனர்.
கொரோனா உறுதியான முதல் 3 நாட்களில் எந்த பிரச்சனையும் இல்லாத நிலையில், அதன் பின்னர் ஆக்சிஜன் அளவு வெகுவாகக் குறைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி ஆக்சிஜன் அளிக்கப்பட்டதாகவும், நுரையீரலில் தொற்று தீவிரமாகப் பரவியதால், வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டதோடு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழன் முதலே உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், சிடி ஸ்கேன் மூலம் மூளையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டு, 48 மணி நேரம் எஸ்.பி.பி.க்கு உயர் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டதாகவும், எவ்வளவோ போராடியும் பலன் அளிக்கவில்லை என்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தீபக் சுப்பிரமணியன், தீவிர சிகிச்சைத் துறை மருத்துவத் தலைவர் டாக்டர் சபாநாயகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.