மலையாள நடிகர் தீலிப் மீதான பாலியல் வழக்கு விசாரணையின் போது போலீசில் வாக்குமூலம் அளித்த நடிகர் நடிகைகள், நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையின் நெருங்கிய தோழியான நடிகை பாமாவும் பல்டியடித்திருப்பதற்கு நடிகை ரேவதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த பிரபல நடிகையை காரில் கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்த குற்றச்சாட்டுக்குள்ளான அவரது முன்னாள் மேலாளார் பல்சர் சுனில் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரபல மலையாள நடிகர் திலீப் தூண்டுதலில்பேரில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் உள்ளிட்ட 9 பேரும் ஜாமீனில் இருக்கும் நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், மலையாள நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சி ஒத்திகையின் போது பாதிக்கப்பட்ட நடிகைக்கும், நடிகர் திலீப்புக்கும் வாக்குவாதம் நடந்ததாக தெரிவித்திருந்த நடிகர் சித்திக், இடைவேளைபாபு, நடிகைகள் பாமா, பிந்துபணிக்கர் உள்ளிட்டோரில் இடைவேளை பாபுவும், பிந்து பணிக்கரும் பிறழ்சாட்சியான நிலையில், அதனை தொடர்ந்து சாட்சியம் அளிக்க வந்த நடிகர் சித்திக்கும், நடிகை பாமாவும் பிறல் சாட்சியாக மாறி அந்தர் பல்டி அடித்தது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.
காரணம் தமிழில் எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட சில படங்களில் கதா நாயகியாக நடித்துள்ள பாமா, பாதிக்கப்பட்ட நடிகையின் நெருங்கிய தோழி ஆவார், அவர் பாதிக்கப்பட்ட போது குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டவர் பாமா என்கின்றனர் சக நடிகைகள்.
ஆனால் அவரது சாட்சியமும் திலீப்புக்கு ஆதரவாக மாறியதால், சாட்சிகள் மிரட்டப்படுவதாக சுட்டிக்காட்டி நடிகர் திலீப் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்யக்கோரி 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
அதே நேரத்தில் நடிகை பாமா, சித்திக் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் பிறழ்சாட்சிகளாக மாரியதற்கு நடிகைகள் மஞ்சுவாரியர், ரேவதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நடிகை ரேவதி, சினிமாவில் உள்ள சக கலைஞர்களை கூட நம்ப முடியவில்லை என்றும் இதனை நினைத்தால் வேதனையாக உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சிகளாக மாறிவருவதால், நடிகர் திலீப் இந்த வழக்கில் இருந்து எளிதில் விடுதலையாகி விடலாம் என்ற நம்பிக்கையில் வலம்வருவது குறிப்பிடதக்கது.