சென்னையில் பிரபல கல்லூரிகளில் சீட் வாங்கி தருவதாக நடிகர் அஜீத்குமாரின் பெயரை தவறாக பயன்படுத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கும் நபர் குறித்து தகவல் வந்ததை தொடர்ந்து வழக்கறிஞர் மூலம் நடிகர் அஜீத்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் திரை உலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை கட்டமைத்து முன்னனி நடிகராக நிலைத்து நிற்பவர் அஜீத்குமார். தான் உண்டு தனது வேலை உண்டு என்று வாழ்ந்து வரும் அவரை அரசியலுக்கு இழுக்க சிலர் ரசிகர் மன்ற நிர்வாகிகளை பகடைக்காயாக்கியதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை கூண்டோடு கலைத்தவர் நடிகர் அஜீத்..!
அஜீத்துக்கு அவ்வப்போது அவரது ரசிகர்கள் எனக்கூறிக்கொள்ளும் பிரபலங்களால் புது புது சிக்கல்கள் உருவாவது வழக்கம். அந்தவகையில் தற்போது அஜீத்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்ற திரை உலக பிரமுகர் ஒருவர், அஜீத்தின் பெயரை பயன்படுத்தி சென்னையில் உள்ள பல்வேறு பிரபல கல்லூரிகளில் மேனேஜ் மெண்ட் ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட்டு வங்கி தருவதாக கூறி சிலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் சில கல்லூரி உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அஜீத் பெயரை பயன்படுத்தி கல்லூரியில் சீட்டு கேட்டதாகவும் கூறப்படுகின்றது.
மற்றொரு பிரபலம் அஜீத்தின் அடுத்த படத்தை தான் தயாரிக்க இருப்பதாக கூறி சில பைனான்சியரை அணுகி சில கோடிகளை கடனாக கேட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவங்கள் அஜீத்தின் காதுகளுக்கு எட்டியதால், அதிர்ச்சி அடைந்த அஜீத் சம்பந்தப்பட்ட பிரபலங்களை தொடர்பு கொண்டு தன் பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று அன்பாக கேட்டுக் கொண்டதோடு, இது போல வேறு நபர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாக தனக்கு இதில் தொடர்பில்லை என்பதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையிலும், தன்னுடைய பெயரை பயன்படுத்தும் நபர்களிடம் மாணவர்களின் பெற்றோர் பணம் கொடுத்து ஏமாந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அஜீத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவரது சட்ட ஆலோசகர் பரத் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,அண்மை காலமாக தனிநபர்கள் சிலர் நடிகர் அஜித்தின் பெயரை தவறாக பயன்படுத்தி முன்னிலைப்படுத்தும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், பல வருடங்களாக நடிகர் அஜித்துடன் பணியாற்றி வரும் மேலாளரான சுரேஷ் சந்திரா என்பவர் மட்டுமே அஜித்தின் அனுமதி பெற்ற பிரதிநிதி என்றும், சமூக மற்றும் தொழில் ரீதியான விஷயங்களுக்கு சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாரையும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் அஜித் பெயரை குறிப்பிட்டு எந்த ஒரு நிறுவனமோ, தனிநபரோ அணுகினால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தனது அறிக்கையின் மூலம் எவர் ஒருவரின் மனதும் புண்பட்டுவிடக்கூடாது என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை கூட அஜீத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.