கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காதலனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெய்வமகள் டிவி சீரியல் நடிகை சுசித்ராவை காவல் துறையினர் தேடிவருகின்றனர். காதலியை குறும்பட நாயகியாக்கி அழகுபார்க்க சொந்த வீட்டில் கொள்ளையடித்து போலீசில் சிக்கிய உத்தமபுத்திரன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி தேசிங்கு. இவர் தனது மனைவியுடன் தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 18 பவுன் நகை கொள்ளை போனதாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகார் தொடர்பாக பண்ருட்டி ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் புகார் அளித்த தேசிங்கு மகன் மணிகண்டனின் நடவடிக்கையில் சந்தேகம் எழவே அவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த போது, கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் குறும்படம் ஒன்று மறைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்து விட்டு சென்னைக்கு சென்ற மணிகண்டன், அங்கு டி.வி சீரியல் நடிகர் நடிகைகளை படப்பிடிப்புகளுக்கு அழைத்துச்செல்லும் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது தெய்வமகள் சீரியலில் அகிலா குமார் வேடத்தில் நடித்த சுசித்ரா என்கிற டிவி நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நெருக்கமான நிலையில் வீட்டிற்கு தெரியாமல் நடிகை சுசித்ராவை ரகசிய திருமணம் செய்து கொண்ட மணிகண்டன், அங்கு தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு இல்லாததால் செலவுக்கு பணமில்லாமல் கடுமையான கஷ்டத்தில் தவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த விநாயகர் சதூர்த்தி அன்று சொந்த ஊருக்கு நடிகை சுசித்ராவை அழைத்து சென்றுள்ளார் மணிகண்டன், அப்போது வீட்டின் பீரோவில் நிறைய நகை மற்றும் பணம் இருப்பதை பார்த்ததும் அதனை எடுத்துச்சென்று விற்று அந்த பணத்தை கொண்டு தான் கதாநாயகியாக நடித்து குறும்படத்தை தயாரித்து, யூடியூப்பில் பதிவேற்றம் செய்து சம்பதிக்கலாம் என்று திருட்டுக்கு திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் சுசித்ரா..!
மனைவி சுசித்ராவை சென்னையில் விட்டு விட்டு தனியாக சொந்த ஊருக்கு சென்ற மணிகண்டன் தன் தந்தையும், தாயும் வீட்டை பூட்டிவிட்டு தோட்டத்துக்கு செல்லும் வரை காத்திருந்து, அவர்கள் சென்றவுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 சவரன் நகைகளையும், 50 ஆயிரம் ரூபாயையும் திருடியதாகவும், திருட்டு நகைகளை விற்ற பணத்துடன் மனைவிக்காக காத்திருந்த நிலையில் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
இதற்கிடையே கொள்ளை திட்டத்துடன் ஊருக்குச்சென்ற காதல் கணவன் கையும் களவுமாக போலீசில் சிக்கிய தகவல் அறிந்ததும் கொள்ளை திட்டம் வகுத்து கொடுத்த சீரியல் நடிகை சுசித்ரா, சாமர்த்தியமாக தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தலைமறைவாக உள்ள நடிகை சுசித்ராவின் உண்மையான பெயர் பரமேஸ்வரி என்பது தெரியவந்துள்ளது. அவரை தேடி தனிப்படை சென்னை விரைந்துள்ளது.
மெகா சீரியல் தயாரிக்கும் ஆசையில் களவாணியாகி காதலன் கடலூரில் கம்பி எண்ணிக் கொண்டிருக்க கொள்ளைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்த சீரியல் நடிகை சுசித்ராவோ போலீசுக்கு பயந்து தப்பி ஓடிவருகிறார்.