திரைப்பட தயாரிப்பாளர்கள்- திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையேயான மோதல் முற்றுகிறது. இதனால், அரசு அனுமதி அளித்தாலும் திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.
திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திற்கு, தமிழ் நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், இயக்குநருமான பாரதிராஜா கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், புதிய வெளியீடுகளை திரையரங்குகளுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்தாலும் கூட, QUBE/UFO கட்டணத்தை செலுத்த மாட்டோம், திரையரங்க விளம்பரத்தில் பங்கு வேண்டும், ஆன்லைன் புக்கிங் மூலம் கிடைக்கும் வருவாயில் பங்கு, திரையரங்கு ஷேர் விகிதங்களை மாற்ற வேண்டும், புதிய படங்களுக்கு ஹோல்டு ஓவர் முறையை ஒவ்வொரு வாரமும் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை தயாரிப்பாளர்கள் விதித்துள்ளனர்.
இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தயாரிப்பாளர்களின் கோரிக்கையே அடாவடியாக உள்ளதால் அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.
2கோடி கொடுக்க வேண்டிய நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் 20கோடி கொடுக்கிறார்கள் என்ற திருப்பூர் சுப்பிரமணியம் இது யானையை விடுத்து சுண்டெலியை பிடிக்கும் முயற்சி எனவும் விமர்சித்துள்ளார். தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு செல்லலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.