சூரரைப்போற்று படத்தை திரையரங்கில் காண ஆவலாக இருப்பதாகவும், ஓடிடியில் வெளியிடும் முடிவை நடிகர் சூர்யா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்துள்ளனர்...
திரையரங்குகள் நீண்ட காலமாக மூடிக்கிடக்கும் நிலையில் நடிகர் சூர்யா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள சூரரைப்போற்று படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிடப்போவதாக நடிகர் சூர்யா அறிவித்தார். அவர் இந்த அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் வெளியிட்டார். அவரது அறிவிப்பிற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கதலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி சூர்யாவின் சூரரைப்போர்று வெளியாக உள்ளதாக வெளியான அறிவிப்பை வரவேற்றுள்ள சூர்யா ரசிகர்கள், திரையரங்குகளில் வெளியிட இயலாத சூழ்நிலையால் ஓடிடியில் வெளியிடுவதால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
சூர்யாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அறிவிப்பு வெளியான 5 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரம் பேர் சூரரைப்போற்று படத்தை திரையரங்கில் பார்க்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
சூரரைப்போற்று படம் எப்போது திரையரங்கில் வெளியானாலும் முதல் நாள் முதல் காட்சியை நண்பர்களுடன் காண ஆவலுடன் இருப்பதாகவும், இந்த அறிவிப்பு திருப்தியாக இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
திரையரங்கில் பெரிய திரையில் துல்லியமான சவுண்ட் எபெக்ட்டுடன் பார்த்தால் தான் சூர்யாவின் உழைப்பு தெரியும், படத்தை ரசிக்க இயலும் என்றும் ஓடிடியில் அந்த திருப்தி கிடைக்குமா? என்றும், ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஓடிடியில் வெளியானால் அடுத்த நிமிடமே "தமிழ் ராக்கர்ஸ்" உடனடியாக எச்.டி பிரிண்டை எடுத்து இணையத்தில் பரப்பிவிட அதிக வாய்ப்புள்ளது என்று சில ரசிகர்கள் எச்சரிக்கை செய்தாலும், நீண்ட இடைவெளிக்கு பின்னர், சூர்யா படத்தை காணும் ஆவலில் பெரும் ரசிகர் கூட்டமே காத்திருக்கின்றது.
அதேநேரத்தில் சூர்யாவின் முடிவுக்கு தற்போது திரையரங்கில் திரையிட இயலாத நிலை மட்டும் காரணம் அல்ல என்றும், திரையிடும் முறையில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் அபரிமிதமான வருவாய் இழப்பும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
பிரபல நடிகர்கள் நடிக்கின்ற ஒரு படம் வினியோகஸ்தர்கள் மூலம் திரையரங்குகளில் வெளியிடப்படும் போது, அரசுக்கு கேளிக்கை வரி, திரையரங்கு உரிமையாளர்களுக்கான பங்கு, திரையரங்கு ஒளிபரப்பு கட்டணம், விநியோகஸ்தர் பங்கு என 60 சதவீத வசூல் தொகை அவர்களுக்கே போய்விடுவதாகவும், 40 சதவீதம் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு வருமானமாக கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதாவது ஒரு படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தால் பணம் போட்டு படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு 40 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைக்கும் என்கின்றனர். மேலும் ஓடிடியில் படம் சரியாக போகவில்லை என்றால் தயாரிப்பாளர் இழப்பீடு கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் திரையரங்கில் சரியாக போகவில்லை என்றால் விநியோகஸ்தர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.
எனவே தான், சூர்யாவின் சம்பளம் தவிர்த்து 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் சூரரைப்போற்று படத்தை நேரடியாக 50 கோடி ரூபாய்க்கு மேல் விலை வைத்து ஓடிடியில் விற்றால் வருவாய் இழப்பு ஏற்படாது என்பதை கணக்கிட்டே சூர்யா இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.