சுஷாந்த் மரணம் தொடர்பாக பீகார் போலீசார் பதிவு செய்த வழக்கை மும்பை போலீசுக்கு மாற்றக் கோரி காதலி ரியா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், சுஷாந்தின் தந்தையும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
பாட்னா ராஜீவ் நகர் போலீசில் சுஷாந்தின் தந்தை அளித்த புகாரில், தற்கொலைக்கு தூண்டுதல் பணமோசடி, திருட்டு உள்ளிட்ட 6 பிரிவுகளில் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் 4 போலீசார் கொண்ட குழுவினர் மும்பை விரைந்து, கோரேகனில் உள்ள சுஷாந்தின் சகோதரி, சுஷாந்தின் உதவியாளரிடமும் விசாரணை நடத்தினர்.
அப்போது ஜுன் 8ம் தேதி சுஷாந்துடன் ஏற்பட்ட தகராறால் காதலி ரியா சில உடமைகளை எடுத்துக் கொண்டு பாந்த்ரா இல்லத்திலிருந்து சென்று விட்டதாகவும், அதற்கு மறுநாள் சுஷாந்துடன் சென்று தங்கியிருந்த போது இந்த விவரங்களை சுஷாந்த் தம்மிடம் கூறியதாகவும் அவரது சகோதரி மிது சிங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பீகார் போலீசார் பதிவு செய்த வழக்கை மும்பை போலீசுக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் தன்னையும் இணைக்க கோரி சுஷாந்தின் தந்தை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.