கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தி நடிகை ஐஸ்வர்யா ராயும், மகள் ஆராத்யாவும் சிகிச்சையில் குணமானதால் வீடு திரும்பினர்.
ஐஸ்வர்யா ராயின் மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிசேக் பச்சன் ஆகியோர் கொரோனா பாதித்து முதலில் நானாவதி மருத்துவமனையில் 11ம் தேதி அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா உறுதியான நிலையில் முதலில் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் ஒருவாரம் கழித்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சையில் குணமானதால் இருவரும் இன்று மதியம் வீடு திரும்பியதாக ட்விட்டர் பதிவில் அபிசேக் பச்சன் தகவல் வெளியிட்டுள்ளார். தாமும், தந்தையும் தொடர்ந்து மருத்துவமனையில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.