இயக்குநர் பாரதிராஜாவுக்குத் தாதாசாகிப் பால்கே விருது வழங்க வேண்டும் எனத் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இயக்குநர் பாரதிராஜா ஊர்ப்புறங்களுக்குச் சென்று திரைப்படங்களைப் படமாக்கித் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர் என்றும், சமூக மாற்றத்துக்குத் தேவையான கருத்துக்களை வலியுறுத்தும் திரைப்படங்களை 43 ஆண்டுகளாக இயக்கி வருபவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர் என்றும், பல திறமைசாலிகளைத் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தியவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். 6 முறை தேசிய விருது பெற்றுள்ளதாகவும், 2004ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாரதிராஜாவுக்கு தாதாசாகிப் பால்கே விருது வழங்க நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் மணிரத்னம், நடிகை சுகாசினி, பாடலாசிரியர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட இயக்குநர்கள், நடிகர்கள், படத்தொகுப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தயாரிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.