பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர். இளைமைக் காலத்தில் பாட்னாவில்தான் அவர் கழித்தார். பின்னர், டி.வி செலிபிரட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான அவர் பாலிவுட்டில் தடம் பதித்து அசத்திக் கொண்டிருந்தார். 'தோனி அன்டோல்ட் ஸ்டோரி ' திரைப்படம் அவரை இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாக்கியது.
பல்வேறு சமூகப்பணிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். ஏராளமான நன்கொடைகளையும் அவர் வழங்கியுள்ளார். கேரள வெள்ளத்தின் போது, அந்த மாநிலத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். இளம் நடிகரான இவர், பாலிவுட்டில் இன்னும் உச்சத்தைத் தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் அவரின் வீட்டை ஆய்வு செய்த போது, தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எதையும் அவர் எழுதி வைக்கவில்லை என்பதும் தெரிய வந்தது.
சுசாந்த் சிங்கின் தந்தையின் பெயர் கிருஷ்ணகுமார் சிங்.தாயார் பெயர் உஷா. சுசாந்த் சிங்கின் சகோதரி மிதுசிங் ஒரு கிரிக்கெட் வீராங்கனை. சுசாந்சிங்கின் தாயார் கடந்த 2002- ம் ஆண்டு இறந்து போனார். சகோதரி மிதுசிங் சண்டிகாரில் வசித்து வருகிறார்.
பாலிவுட்டில் நுழைந்து மும்பையில் சுசாந்த் சிங் செட்டிலாகி விட,அவரின் தந்தை பாட்னா ராஜீவ் நகரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். லக்ஷ்மி தேவி என்ற பணிப்பெண் அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். சுசாந்த் சிங் தற்கொலை செய்வதற்கு முன்,நேற்று தந்தைக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது, 'வீட்டை விட்டு வெளியே போக கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமென்று தந்தைக்கு அறிவுரை கூறியுள்ளார்.
பின்னர், பணிப்பெண் லக்ஷ்மி தேவியை அழைத்து, 'அப்பாவை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் ' கூறியுள்ளார். பிறகு, சிறிது நேரம் தந்தையிடம் பேசி விட்டு சுசாந்த் சிங் போனை வைத்துள்ளார். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் சுசாந்த் சிங்கின் போனிலிருந்து அவரின் தந்தைக்கு அழைப்பு போயிருக்கிறது. 'மகன்தான் மீண்டும் பேசுகிறான்' என்று கிருஷ்ணகுமார் போனை எடுக்க, எதிர்முனையிலிருந்து பேசியது மும்பை போலீஸ் .
சுசாந்த் சிங்கின் தற்கொலை குறித்து மும்பை போலீஸார் அவரிடத்தில் கூற, கிருஷ்ணகுமார் சிங் மயங்கி விழுந்து விட்டார். வேலைக்காரப் பெண் லக்ஷ்மி தேவிதான் அவருக்கு மயக்கம் தெளிய வைத்துள்ளார். தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சுசாந்த் சிங்கின் வீட்டில் கூடியுள்ளர். சுசாந்த் சிங்கின் தந்தைக்கும் ஆறுதல் கூறியிருக்கின்றனர். இன்னும் கூட சுசாந்த் சிங்கின் தந்தை அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று நெருங்கிய உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.
பிகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள மால்திகா கிராமம்தான் சுசாந்த் சிங்கின் பூர்விகம். கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் சுசாந்த் சிங் பங்கேற்பது உண்டு. ஆறு மாதத்துக்கு முன் கூட தன் நெ‘சொந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் சுசாந்த் சிங் கலந்து கொண்டுள்ளார். சுசாந்த் சிங்கின் தற்கொலையால் இந்த கிராம மக்களும் சோகத்தில் உள்ளனர்.
மும்பை கூப்பர் மருத்துவமனையில் சுசாந்த் சிங்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மும்பையில் இன்று( ஜூன் 15ந் தேதி) சுசாந்த் சிங்கின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதற்காக, சுசாந்த் சிங்கின் குடும்பத்தினர் மும்பை வந்துள்ளனர்.