பீட்சா டெலிவரியின் போது ஏற்பட்ட பிரச்சனையால், சினிமா நடிகையின் எண்ணை ஆபாச இணையதளங்களில் பதிவிட்டதாக டாமினோஸ் பீட்சா உணவக டெலிவரி ஊழியரை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடித்திருப்பவர் நடிகை காயத்ரி ராவ். சென்னை தேனாம்பேட்டை சீதாம்மாள் காலணியில் வசித்து வருகிறார். இவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்கு பல்வேறு எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாகவும், அனைவரும் ஆபாசமாக பேசுவதாகவும், தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக நடிகை காயத்ரி புகாரில் கூறியிருந்த சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரை, தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்தனர்.
மேலும், அவர்களின், செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்ததில், ஆபாச வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்காக, அவர்கள் வைத்திருந்த வாட்ஸ்அப் குரூப்பில் நடிகை காயத்ரி ராவ் நம்பரை ஒருவர் பதிவிட்டு இருந்ததும், அதை வைத்து தொடர்பு கொண்டதும் தெரியவந்துள்ளது.
அந்த வாட்ஸ்அப் குரூப்பில் நடிகை காயத்ரி ராவின் நம்பரை பதிவிட்ட நபர் யார் என போலீசார் விசாரித்தபோது, டாமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தேனாம்பேட்டை போலீசார் பரமேஸ்வரனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், நடிகை காயத்ரி ராவ் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி, ஆன்லைனில் பீட்சா ஆர்டர் செய்தது தெரியவந்தது. அந்த பீட்சாவை பரமேஸ்வரன் என்ற ஊழியர், டெலிவரி செய்வதற்காக வந்துள்ளார். அவர் தனது உணவகத்தில் இருந்து புறப்பட்ட சமயத்தில் இருந்து, நடிகை காயத்ரி ராவிற்கு அடிக்கடி செல்போனில் அழைத்து பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால், பீட்சா டெலிவரியின்போது பரமேஸ்வரனுக்கும், நடிகை காயத்ரி ராவிற்க்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆத்திரத்தில் நடிகை காயத்ரி ராவின் நம்பரை, வாட்ஸ் அப் க்ரூப்பிலும், ஆபாச இணைய தளங்களிலும் பழிவாங்கும் நோக்கத்தில் பதிவிட்டதாக, போலீசாரின் விசாரணையின்போது, பரமேஸ்வரன் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, டாமினோஸ் பீட்சா நிறுவனத்திடம் கேட்ட போது பரமேஸ்வரனை பணி நீக்கம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.