சர்ச்சைகளுக்குள்ளான திரௌபதி படத்திற்கு தடை விதிக்க கோரி, குறிப்பிட்ட சமூகத்தினர் மத்திய திரைப்பட தணிக்கை துறையிடம் புகார் அளித்திருந்த நிலையில், மறு தணிக்கை செய்யப்பட்ட திரௌபதி படத்தில் 14 இடங்களில் ஆடியோவில் கட் செய்யப்பட்டு படத்திற்கு யுஏ சான்று அளிக்கப்பட்டுள்ளது.
நாடகக் காதலுக்கு எதிரான கருத்துக்களுடன் அண்மையில் வெளியாகி பரபரப்பை பற்ற வைத்தது திரௌபதி படத்தின் முன்னோட்ட காட்சிகள்.
இதையடுத்து திரௌபதி படம் தங்கள் சமூகத்திற்கு எதிரானது எனக் கூறி சம்பந்தப்பட்ட சாதி அமைப்பு சார்பில் படத்தை தடை செய்யுமாறு மத்திய தணிக்கைத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட திரௌபதி படத்தை மீண்டும் தணிக்கை செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து செவ்வாய்கிழமை திரவுபதி படம் மறுதணிக்கைக்காக சென்சார் குழுவினருக்கு திரையிடப்பட்டது.
நடிகை கவுதமி உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழுவினர் படத்தை பார்த்தனர். குழுவில் பெண்கள் மட்டும் 5 பேர் இடம் பெற்றிருந்தனர். 2 மணி நேரம் 34 நிமிடங்கள் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் 14 இடங்களில் சர்ச்சைக்குரியதாக இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்தனர். அந்த 14 காட்சிகளிலும் ஆடியோவை மட்டும் கட் செய்ய அறிவுறுத்தியதாகவும், 3 இடங்களில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கு கட் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக அடக்குனா அடங்கக் கூடாதுன்னு அண்ணன் சொல்லிருக்காப்ல... என்று இளைஞர் ஒருவர் பேசும் வசனத்திற்கு கட் கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்ட நிலையில் , படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுவினர் படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதி அளித்தனர்.
இதையடுத்து திரௌபதி படம் வருகிற 28 ந்தேதி 300 திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளதாக தெரிவித்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி, இந்த படம் எந்த சாதிக்கும் எதிரானது அல்ல என்றும் சென்னையில் சார்பதிவாளர் அலுவலகம் ஒன்றில் மோசடியாக நடந்த 3000 நாடக காதல் திருமணங்கள் குறித்து படம் பேசப் போகிறது என்றார்..!