பிகில் திரைப்பட வசூல் விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரான பைனான்சியர் அன்பு செழியனிடம் சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பிகில் பட வசூல் விவகாரம் தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் பைனான்சியர் அன்புச்செழியன், அவரது நண்பர் வீடு மற்றும் அலுவலகங்கள், படத் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்துக்கு சொந்தமான இடம் உள்ளிட்ட 38 இடங்களில் வருமான வரித்துறை அண்மையில் சோதனை நடத்தியது. மேலும், அப்பட நாயகனான நடிகர் விஜய்யின் வீட்டிலும் சோதனை நடத்தி, அவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அன்புச்செழியன், அவரது நண்பரின் இடங்களில் நடந்த சோதனையின்போது 77 கோடி ரூபாய் ரொக்கப்பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பிகில் படத்துக்கு நடிகர் விஜய் பெற்ற சம்பளம் மூலம் வாங்கியுள்ள அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இந்நிலையில் நடிகர் விஜய், கல்பாத்தி அகோரம் மற்றும் அன்புச்செழியன் ஆகிய மூவரும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி, பல்வேறு கேள்விகளை தெளிவுபடுத்தக்கோரி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதன்படி, கடந்த 11 ஆம் தேதி நடிகர் விஜய் மற்றும் பைனான்சியர் அன்பு செழியனின் ஆடிட்டர்களும், 12 ஆம் தேதி தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் மகளும், ஏ.ஜி.எஸ் நிறுவன முதன்மை செயல் அதிகாரியுமான அர்ச்சனா கல்பாத்தியும் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியன் நேரில் ஆஜரானார். அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அவரிடம் கட்டு கட்டாக பணம் கிடைத்தது எப்படி, வங்கியிலிருந்து எவ்வாறு அந்த பணம் பெறப்பட்டது, 300 கோடி ரூபாய் தொடர்பான வரி ஏய்ப்பு, நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது குறித்து அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.