நடிகர் சங்க தேர்தலுக்கு தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், அதே சமயம் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இதற்கு முன்பு பலமுறை பதவி காலம் முடிந்த நிர்வாகிகள் தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகித்துள்ளதாக சுட்டிக்காட்டிய விஷால், சட்ட ரீதியான அம்சத்தை ஆராயாமல் நடிகர் சங்க தேர்தலை தனி நீதிபதி ரத்து செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நடிகர் சங்க தேர்தல் தொடர்பான நடவடிக்கையை தொடர உத்தரவிட்டனர்.
அதே சமயம் தேர்தல் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் உயர் நீதிமன்றம் ஒப்புதல் இன்றி வெளியிடக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அன்று மதியம் மேல்முறையீடு தொடர்பான அனைத்து மனுக்களும் விசாரிக்கப்படும் என்று அறிவித்தனர்.