முரசொலி நிலம் தொடர்பான சவால் வழக்கம் போல வெற்று சவடால் தானா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக ராமதாஸ் தெரிவித்த குற்றச்சாட்டை ஸ்டாலின் மறுத்திருந்தார். அந்த நிலத்தை மீட்டு உரியவர்களிடம் வழங்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாஜக புகார் அளித்தது. அதன்மீதான விசாரணையின்போது, வாடகை கட்டிடத்தில் முரசொலி இயங்கி வருவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில், முரசொலி வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை, குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது நிர்வாகம் வெளியிடுமா? என்றும், கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா? என்றும் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.