துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பாக, திமுக தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது பற்றி ஆலோசிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே சம்மதம் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் ஆதரித்து வாக்களித்தனர்.
இதை அடுத்து அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சென்னை உயர் நீதிமன்றம், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கடந்த 2018 ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பில் கூறி விட்டது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது பற்றி சபாநாயகர்கள் நியாயமான கால அளவு அல்லது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 21 ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இதை சுட்டிக் காட்டி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான தகுதி நீக்க வழக்கை விசாரிக்குமாறு திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில் கேட்டுக்கொண்டார்.