குடியுரிமைச் சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் கலந்துகொண்டன. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் நேரில் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர், 95 ஆண்டுகள் தமிழகத்திற்காக போராடிய பெரியாரின் சிலை இழிவுப்படுத்தப்படுவது வெட்கத்துக்குரியது என்றார். இந்த விவகாரத்தில் அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார். 5-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.