காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி கூட திமுக வழங்காதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று அக்கட்சி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமியுடன் கூட்டாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையில் இருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
303 ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்கள் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி இருக்கிறார். 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ, துணைத் தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அழகிரி, இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மறைமுக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுகவை குற்றம்சாட்டி அழகிரி விடுத்துள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.