சட்டப்பேரவையில் காவிரி தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசிய போது அவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.
முதலமைச்சரின் தனித்தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தீர்மானத்தில் மத்திய அரசை வலியுறுத்துவது பற்றி மட்டும் இருப்பதை சுட்டிக்காட்டி தீர்மானத்தில் கர்நாடகாவையும் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.
டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக 3 மாதமாக அரசுக்கு எடுத்துக் கூறியதாக அவர் கூறினார். விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் எல்லாம் தற்போது கருகியிருப்பதற்கு யார் பொறுப்பு என்றும் அவர் வினவினார்.
கர்நாடகாவில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தின்போது காவிரி தொடர்பாக அம்மாநில அமைச்சர்களுடன் முதலமைச்சர் பேசி இருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவுடன் பேச்சு நடத்துவது ((தற்கொலைக்கு சமம் என்றும்)) உரிமையை அடகு வைப்பதற்கு சமம் என்றும் கூறினார்.
காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஒத்திவைக்கும் வகையில் செயல்பட்டதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வினர் ஒருநாள் கூட நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டார்.
உடனே, தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசவில்லை என எதிர்கட்சி தலைவர் இல்லாத பொல்லாத விசயங்களை கூறுகிறார் என்று தெரிவித்த முதலமைச்ச்ர, நாடாளுமன்றத்தில் காவிரி தொடர்பாக தி.மு.க.வினர் பேசியிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கூறினார்.
பேசினால் மட்டும் போதுமா என்றும் நாடாளுமன்றத்தை முடக்கும் அளவுக்கு அழுத்தம் தரவில்லையே என்றும் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அதிகமான அழுத்தம் கொடுப்பதில் என்ன தவறு உள்ளது என்றும் கேட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க தாமதப்படுத்தியதால் மத்திய அரசுக்கு எதிராக 2018-இல் அ.தி.மு.க. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததை குறிப்பிட்ட இ.பி.எஸ், தற்போதைய அரசுக்கு அது போன்ற துணிச்சல் இல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
உடனே குறுக்கிட்ட முதலமைச்சர், துணிச்சல் பற்றி தங்களுக்கு அ.தி.மு.க.வினர் கற்றுத் தர தேவையில்லை என்றார்.
தி.மு.க. அரசு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்திருந்தால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்ட இ.பி.எஸ்., விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்கும் அதே வேளையில், தமிழக அரசு முழுமனதுடன் செயல்பட்டால் தான் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் பெற முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
பின்னர் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, வானிலை மையத்தை தொடர்பு கொண்டு எவ்வளவு மழை பெய்யும் என தெரிந்து கொண்டு மேட்டூர் அணை அரசு திறக்கவில்லை என்று கூறினார். மேட்டூர் அணையின் நீர் மட்டம் படுபாதாளத்திற்கு சென்று விட்டதாகவும், அரசு உரிய வகையில் செயல்படாவிட்டால் 20 மாவட்டங்களில் கோடை காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் இ.பி.எஸ். தெரிவித்தார்.