முதலமைச்சர் கொண்டுவந்த காவிரி தொடர்பான தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எந்தச் சூழலிலும் விட்டுக் கொடுக்காமல் வாதிட்டு காவிரி நீர் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெற்றுத் தரப்படும் என்று கூறினார். உச்சநீதிமன்றத்தின் எந்த உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர், காவிரி விவகாரத்தில் செயற்கையான நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
2 நாட்களில் நடைபெறும் காவிரி முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் அடுத்த 10-15 நாட்களுக்கு தர வேண்டிய நீரை சேர்த்து வழங்க வலியுறுத்தப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர், ஏற்கனவே குழு மற்றும் ஆணையம் நிர்ணயித்துள்ள அளவில் கர்நாடகா அளிக்க வேண்டிய நீர் அளவில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்யவும் வற்புறுத்தப்படும் என்றார்.
பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசிய பின் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மறுப்போர் யாருமின்றி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.