கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்பார்கள் என காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால் மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா இத்தகவலை தெரிவித்தனர். தகுதி வாய்ந்த தலைவர்கள் பலர் இருப்பதால் முதலமைச்சரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தற்போது முடிவு எட்டப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் விளக்கமளித்தனர். நாடாளுமன்ற தேர்தல் வரை டி.கே.சிவக்குமார் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நீடிப்பார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வருகிற சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதில் எதிர்க்கட்சித் தலைவர்கள், ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள், உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.