அமைச்சர் கார் மீதான செருப்பு வீச்சால் தனக்கு தூக்கம் வரவில்லை என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து மன்னிப்புக் கேட்ட பாஜகவின் டாக்டர் சரவணன் மீண்டும் தாய் வீடான திமுகவிற்கு செல்லவிருப்பதாக அறிவித்துள்ளார்.
பாஜக மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன் நேற்று இரவு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத அரசியலில் ஈடுபடுவதில் உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.
நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசியது விரும்பதாக ஒன்று என்றும் அந்த சம்பவம் தம் மனதை உறுத்தி கொண்டே இருந்ததாகவும் கூறிய சரவணன், தூக்கம் வராத காரணத்தால் நிதியமைச்சரை சந்தித்து அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தெரிவித்தார்.
பாஜக தொண்டர்கள் கட்டுபாட்டை மிறி நடந்து கொண்டது வருத்தம் அளிக்கிறது என்றும் பாஜகவில் உறுதியாக தாம் தொடரப் போவதில்லை என்றும் தெரிவித்த டாக்டர் சரவணன், திமுக தன்னுடைய தாய் வீடு, மீண்டும் தாய் வீட்டிற்கு வந்தாலும் தப்பில்லை எனக் கூறினார்.
தொடர்ந்து தனது டாக்டர் தொழிலை பார்க்க போவதாகவும், காலையில் பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் எழுத உள்ளதாகவும் சரவணன் தெரிவித்தார் .
டாக்டர் சரவணன், முதலில் மதிமுகவில் இருந்து திமுக சென்று எம்.எல்.ஏவாக வென்று, தேர்தலில் மீண்டும் சீட் ஒதுக்கப்படாததால் பா.ஜ.கவுக்கு தாவி மறுபடியும் தாய் வீடான திமுகவுக்கே செல்லவிருப்பது குறிப்பிடதக்கது.