லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது வெறும் 5,600 ரூபாய்தான் இருந்ததாகவும், ஆனால் பண்டல் பண்டலாக அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவுவதாகவும் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். பள்ளியில் பயிலும்போதே மெர்சிடிஸ் பென்ஸ் பயன்படுத்தும் அளவுக்கு செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கோடிக்கணக்கில் வைரங்களும் தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என அவர் மறுத்துள்ளார்.
திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, தங்கள் குடும்பத்திற்கென்று ஒரு பாரம்பரியம் உள்ளது என கூறினார். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது, கோடிக்கணக்கில் வைரங்களும் தங்கக்கட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார்.
தன்னுடைய வீட்டில் பண்டல் பண்டலாக அமெரிக்க டாலர்கள் கைப்பற்றப்பட்டதாக கூறுவதெல்லாம் நியாயமா? என கேட்ட கே.சி.வீரமணி, அவ்வளவு அமெரிக்க டாலர்களுக்கு நான் எங்கே போவேன் என வினவினார்.
சிறு வயதில் இருந்தே தான் கார் ஆசை கொண்டவன் எனக் கூறிய முன்னாள் அமைச்சர், தன்னிடம் உள்ளது 40 ஆண்டு பழமை வாய்ந்த ரோல்ஸ்ராய்ஸ் கார் என்பதால், அதன் மதிப்பு 5 லட்சத்தை தாண்டாது என்றார்.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது, பாத்ரூம் போகும்போது கூட 4 பேர் கூடவே வந்ததாகவும், செல்போனை பறிமுதல் செய்ததோடு, டிவி கூட பார்க்கவிடவில்லை என்றும் கே.சி.வீரமணி கூறினார்.