ராணிப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமாரின் பங்களா அருகே, முட்புதரிலிருந்து 91.67 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. எஸ் எம் சுகுமார் மீது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையை அடுத்த வானாபாடி பகுதியில், எஸ்.எம்.சுகுமாருக்கு சொந்தமான பங்களா மற்றும் அலுவலகம் உள்ளது. அங்கு இருபதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், முப்பதுக்கும் மேற்பட்ட மர்ம நபர்களும் ஒன்றாகக்கூடி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தேர்தல் பறக்கும் படையினர், ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி மற்றும் சார் ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பங்களா சுற்றுச் சுற்றுச் சுவரில் இருந்து குதித்து தப்பி ஓடிய தினேஷ் என்ற நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். தேர்தல் பணிக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து 27 பேர் வரவழைக்கப்பட்டதாகவும், அதில் ஒருவர் சுமார் 15 லட்சம் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியதாகவும் பிடிபட்ட நபர் கூறியுள்ளார். பணத்துடன் தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிக்க, குழுவில் உள்ள அனைவரையும் அடைத்துவைத்து அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த நபர் கூறியுள்ளார்.
மற்றவர்களிடம் விசாரித்தபோது பணம் ஏதும் விநியோகிக்கவில்லை, துண்டு பிரசுரங்கள் மட்டுமே விநியோகித்து வந்ததாக கூறியுள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை போட்டபோது, பங்களா அருகே உள்ள முட்புதரில் 3 பைகள் கிடந்துள்ளன. அவற்றை சோதனை போட்டபோது 91.67லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது.
பணத்தை பறிமுதல் செய்த ராணிப்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி இளம்பகவத், பங்களாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 27 பேரை போலீசார் உதவியுடன் விசாரணைக்காக அழைத்துச் சென்றார். அவர்களிடம் இருந்து 28 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முட்புதரிலிருந்து கைப்பற்றபட்ட பணம் யாருடையது, சித்தூரில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் பணப்பட்டுவாடா செய்ய பயன்படுத்தப்பட்டனரா? பங்களாவில் அடைத்து வைத்து தாக்கப்பட்டனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு யாரும் சொந்தம் கொண்டாட காரணத்தினால் கருவூலத்தில் சேர்க்கப்படும் என ராணிப்பேட்டை தேர்தல் அலுவலரும் சார் ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் மீது, சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், துன்புறுத்துதல், அச்சுறுத்துதல், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.