கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஒருவர், தன்னிடம் பெயர் சூட்டுவதற்கு வழங்கப்பட்ட குழந்தைக்கு டிடிவி தினகரனாகிய நான், நாளைய முதல் அமைச்சரின் பெயரை சூட்டுகிறேன் என்று பெயர் வைத்து குழப்பத்தை ஏற்படுத்தினார்.
தேர்தல் வந்துவிட்டால் போதும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வீதி வீதியாக வருவதும், அவர்களை வாழ்த்தி கட்சி தொண்டர்கள் கோஷமிடுவதும் வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது
காட்டுமன்னார் கோயில் தொகுதியில் அமமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள நாராயணமூர்த்தி தன்னை டிடிவி தினகரனாக பாவித்து வாக்கு சேகரித்து வருகின்றார்.
அந்தவகையில் மழவராய நல்லூர் என்ற கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்ற நாரயணமூர்த்தியிடம், பிறந்து 15 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்றை கொடுத்து பெயர் சூட்டும் படி கூறினர்.
முதலில் ஊர் பெயர் தெரியாமல் அருகில் நின்றவரிடம் கேட்டுத்தெரிந்து கொண்ட வேட்பாளர் நாராயண மூர்த்தி, இந்த பாலகனுக்கு டிடிவி தினகரனாகிய நான், நாளைய முதல் அமைச்சரின் பெயரை சூட்டுகிறேன் என்று உரக்க கூறி குழப்பத்தை ஏற்படுத்தினார் நாராயணமூர்த்தி.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் தான் யார் முதல் அமைச்சர் என்பதே தெரியும், அப்படி இருக்க நாளைய முதல் அமைச்சர் என்று குழந்தையை அழைப்பார்களா ? அல்லது முதல் அமைச்சர் தேர்தெடுக்கப்பட்ட பின்னர் அந்த பெயரை சொல்லி குழந்தையை அழைப்பார்களா ? என்ற குழப்பத்துக்கிடையே அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நகைப்பை வரவழைத்தது
தொகுதிக்கு நல்லது செய்யறது இருக்கட்டும் முதலில் அந்த குழந்தைக்கு என்ன பெயர் ?என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் என்பதே இந்த காட்சியை பார்த்தவர்களின் ஆதங்கமாக இருந்தது..!