கோவை தொண்டாமுத்தூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பெண்களின் இடுப்பு குறித்து கேலி பேசிய திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனிக்கு கனிமொழி டுவிட்டர் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை தொண்டாமுத்தூரில் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து பேசிய திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, பாரின் மாட்டு பாலை குடித்து குடித்து பெண்களும், சிறுவர்களும் பலூன் போல ஊதிக் கிடப்பதாகவும், முன்பெல்லாம் பெண்களின் இடுப்பு எட்டு போன்று இருந்ததாகவும் தற்போது பெருத்து பேரலாகிவிட்டது எனவும் கேலியாக பேசியதால் சர்ச்சை உருவானது
இதற்கு பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சொந்த கட்சி பேச்சாளராக இருந்தாலும் திமுக எம்.பி கனிமொழி, துணிச்சலாக, டுவிட்டரில் கண்டித்துள்ளார். லியோனியின் பெயரை குறிப்பிடாமல் வெளியிட்டுள்ள பதிவில், அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும், பெண்களை இழிவுப்படுத்தி தனிப்பட்டமுறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கதக்கது என்றும் இதை எல்லோருமே மனதில் வைத்துக் கொண்டால் சமூகத்திற்கு நல்லது என்றும் இதுவே திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூக நீதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் பீப் சாங் பாடினார் என்று சிம்புவுக்கு எதிராக குரல் கொடுத்து, போராடிய ஒரு மாதர் சங்கம் கூட லியோனியின் பேச்சை கண்டித்து வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.