விருத்தாசலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரேமலதா விஜயகாந்த் ஒரு ஆண் குழந்தைக்கு பாண்டியன் என்று பெயர் சூட்டிய நிலையில் குழந்தையின் உறவினர்கள் வேறு பெயர் வைக்கச்சொல்லி குரல் எழுப்பியதால் வேறு பெயர் வைக்கும் நிலை ஏற்பட்டது.
விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்துக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியானது. இதையடுத்து அவர் விறு,விறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
குப்பநத்தம் பகுதியில் திறந்த காரில் நின்றபடி வாக்கு சேகரித்த பிரேமலதா ஒரு குழந்தைக்கு பிரபாகரன் என பெயர் சூட்ட அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
மற்றொரு இடத்தில் பிரேமலதாவின் கையில் ஆண் குழந்தையை கொடுத்த பெற்றோர் குழந்தைக்கு பெயர் சூட்டும்படி கேட்டுக் கொண்டனர். என்ன பெயர் வைப்பது என்று யோசித்த பிரேமலதா, குழந்தைக்கு சத்ரியன் என்று பெயர் சூட்டலாமா ? என்று கேட்டவாறே பாண்டியன் என்று பெயர் சூட்டுவதாக அறிவித்தார், உடனே இந்த ஊரில் நிறைய பேருக்கு பாண்டியன் என்று பெயர் இருப்பதாக கூறி வேறு பெயர் வைக்குமாறு கூறினர்.
பின்னர் முதலில் தான் யோசித்த சத்ரியன் என்ற பெயரையே வைப்பதாக கூறியதும் அனைவரும் ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டனர்.