கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனித்தொகுதியில் போட்டியிடும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுத்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனித்தொகுதியில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் அதன் தலைவர் தயா.பேரின்பம் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்.
வேட்பு மனு தாக்கல் செய்ய ஆதரவாளர்கள் 40 பேருடன் பருத்தி... கரும்பு.... மற்றும் கலப்பையுடன் வந்தார் வேட்பாளர் பேரின்பம்
அவரும் அவரது கட்சியினரும் விவசாயியின் பெயரை சொல்லி கையில் தட்டுக்களை ஏந்தி கடை கடையாக சென்று பிச்சை எடுத்தனர்
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிப்பதாகவும், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை இயற்றி விவசாயிகளை பிச்சைக்காரர்களாக ஆக்க முயற்சிப்பதாக கூறி உண்மையிலேயே உடன் வந்த விவசாயிகளை தட்டு ஏந்தி பிச்சை எடுக்க விட்ட பேரின்பம் , தான் பிச்சை எடுப்பதை படம் பிடிக்க தவறவில்லை
திட்டக்குடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பிச்சை எடுத்தபடி வந்த அவருக்கு ஒரு கடையில் பிச்சையிட மறுத்து விட்டனர்.
பிராண்டடு சர்ட்டு, பையில் ஸ்மார்ட் போன் சகிதம் வசூல் விவசாயியாக வலம் வந்த பேரின்பம் வட்டாட்சியர் அலுவலகம் வந்து தேர்தல் அதிகாரியிடம் தான் கையோடு கொண்டு வந்திருந்த பணத்தை கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
உழைக்கும் விவசாயிகள் பிராண்டடு சர்ட் ஸ்மார்ட் போன் உபயோகிப்பதில் தவறில்லை, உழைக்காமல் கட்சி நடத்திக் கொண்டு, ஊருக்கு சோறு போடும் விவசாயியை பிச்சைகாரன் போல உருவகப்படுத்துவது நம்மை நாமே இழிவு படுத்தும் செயல்..!